இந்தியா

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இலவச இதய பரிசோதனை - அகிலேஷ் யாதவ் கோரிக்கை

Published On 2024-05-03 15:41 GMT   |   Update On 2024-05-03 15:42 GMT
  • மக்களின் உயிர் அபாயகர சூழலில் உள்ளது.
  • நன்கொடை பெற்றது அனைவருக்கும் தெரியும்.

இந்திய மக்களின் வாழ்க்கை அபாயகர சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவருக்கும் இலவசமாக இதய பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மெயின்பூரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய அகிலேஷ் யாதவ், "அரசாங்கத்தின் முடிவு காரணமாக அரசியலமைப்பு மட்டுமின்றி மக்களின் உயிரும் அபாயகர சூழலில் உள்ளது."

"கொரோனா காலக்கட்டத்தில் இந்த அரசாங்கம் தடுப்பூசியை எப்படி கையாண்டது என்பதும் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் நன்கொடை பெற்றதும் அனைவருக்கும் தெரியும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று இதய பரிசோதனை செய்து கொள்கின்றனர்."

"கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, நாடு முழுக்க மருத்துவமனைகளில் இ.சி.ஜி. போன்ற இதய பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எங்கு, எப்போது பரிசோதனை செய்து கொள்ள விரும்பினாலும், எடுத்துக் கொள்ளலாம். நாட்டு மக்களின் வாழ்க்கையை பா.ஜ.க. தலைவர்கள் அபாயத்தில் தள்ளிவிட்டனர்," என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News