உள்ளூர் செய்திகள்

சென்னை, பட்டாபிராம் மேம்பாலம் பணி முடிவது எப்போது?

Published On 2024-05-16 08:21 GMT   |   Update On 2024-05-16 08:21 GMT
  • மேம்பால பணிகள் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை.

சென்னை-திருவள்ளூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் ரெயிவே கேட் உள்ளது. இதன் வழியாக சென்னையில் இருந்து பட்டாபிராம் சைடிங் செல்லும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் 45 நிமிடங்களுக்கு ஒருமுறை ரெயில்வேகேட் மூடப்படுவதால் நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கு தீர்வு காணும் வகையில் அப்பகுதியில் கடந்த 2010-11ம் ஆண்டில் 4 வழிச்சாலை ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.பின்னர் சென்னை-திருச்சி 6 வழி நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்து. திட்ட மதிப்பீடும் ரூ.52.11 கோடியாக உயர்த்தப்பட்டது. 6 வழிச்சாலை மேம்பால பணிகள் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக கட்டுமான பணிகள் தாமதப்பட்டன. பின்னர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த நிலையில் பணிகள் தாமதமாக நடந்து வருவதால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள.

மேலும் மேம்பாலப்பணி காரணமாக சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னை, அம்பத்தூர், ஆவடியில் இருந்து திருநின்றவூர், திருவள்ளூர், திருத்தணி, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இதனால் வாகனங்கள் சுமார் 7 கி.மீட்டர் சுற்றி சென்று வருகின்றன.

இதன்படி சென்னையில் இருந்து அம்பத்தூர் ஆவடி, பட்டாபிராம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதிக்கு இயக்கப்படும் வாகனங்கள் தற்போது மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே தண்டுரை, அன்னம்பேடு வழியாக மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று அங்கிருந்து நெமிலிச்சேரி ரவுண்டானாவை கடந்து சென்னை- திருத்தணி நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும். இதனால், வாகனங்கள் சுமார் 6 முதல் 10 கிமீ தூரம் வரை மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள் சுற்றிச் செல்வதால் எரிபொருள் விரயம் ஆவதோடு பயண நேரமும் அதிகரிக்கிறது.

மேலும் சர்வீஸ் ரோட்டை நம்பி செல்லும் கார், மோட்டார் சைக்கிள், வேன் போன்ற தனியார் வாகனங்கள், ரெயில்வே கேட் மூடப்படும் போது, 10 நிமிடம் முதல் 15 நிமிடம் தாமதமாக செல்கின்றன.

மேலும் சர்வீஸ் சாலையில் திருமண மண்டபங்கள் ஆஸ்பத்திரி, வணிக வளாகங்கள் நிறைந்துள்ளதால் அப்பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாளும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆம்புலன்ஸ்கள் சிக்கிக் கொள்கின்றன.

மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் இன்னும் முடிவடையாமல் உள்ளது. 80 சதவீத பணிகள் முடிந்து உள்ள நிலையில் ரெயில்வே பகுதியில் மட்டும் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலபணி நடக்க வேண்டியுள்ளது. அந்த பணியும் முடிந்தால் மேம்பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே தற்போது சென்னை-திருவள்ளூர் மார்க்கத்தில் மேம்பாலத்தின் இருபுறமும் ஏற்ற, இறக்க பகுதி, சரிவு பாதையில் மண்கொட்டப்படுகிறது. எனவே இந்த மாத இறுதிக்குள் மேம்பாலத்தில் ஒருவழிப்பாதையை முழுமையாக முடிக்க நெடுஞ்சாலைதுறை முடிவு செய்து உள்ளது.

ரெயில்வே இடத்தில் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உளளனர்.

Tags:    

Similar News