சமையல்

மருத்துவ குணமுள்ள அத்திக்காய் பொரியல் சமைப்பது எப்படி?

Published On 2024-02-20 09:57 GMT   |   Update On 2024-02-20 09:57 GMT
  • உடலின் பல பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது.
  • மருத்துவத்தைப் பொறுத்தவரை அத்தி பழத்துக்கென தனி இடம் உள்ளது.

அத்தி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அத்திப்பழம், உடலின் பல பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இயற்கை மருத்துவத்தைப் பொறுத்தவரை அத்தி பழத்துக்கென தனி இடம் உள்ளது. கிராமப்புறங்களிலும் மலைவாசஸ்தலங்களிலும் அதிகமாக வளரும் அத்திப்பழத்தை பெரும்பாலானோர் தேனில் ஊற வைத்தும், காய வைத்து பொடியாக்கியும் சாப்பிட்டிருப்போம்.

ஆனால், இளம் காயாக இருக்கும் அத்தியை பறித்து ருசியாக சமைக்க முடியும் என்பது பலருக்கும் தெரியாத தகவல். வாய் ருசிக்க அத்திக்காய் பொரியல். எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்...

தேவையான பொருள்கள்:

அத்திக்காய் - கால் கிலோ (நல்ல இளம் காயாகப் பார்த்து எடுத்துக்கொள்ளவும். காயின் காம்பை உடைத்தால் பால் வரக்கூடிய அளவுக்கு இருப்பது போன்ற காய் என்றால் மிகவும் நல்லது)

பெரிய வெங்காயம்- 2 (நறுக்கியது)

வரமிளகாய் - காரத்துக்கு ஏற்ப

தக்காளி - 1

பூண்டு - 6-8 பல்

சோம்பு - 1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

மஞ்சள் தூள் - சிறிதளவு

கடுகு - தாளிக்க

கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை

அத்திக்காயை சிறிது சிறிதாக வெட்டி நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள்தூள் சிறிதளவு, உப்பு சிறிதளவு சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். முக்கால் பதம் வெந்ததும் நீரில் இருந்து எடுத்து தனியாக வடிகட்டி வைக்க வேண்டும்.

ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கடுகு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும், கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்க்க வேண்டும். கூடவே நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் பூண்டு பல் மற்றும் சோம்பு இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும். பூண்டும், சோம்பும்தான் இந்த டிஷ்சுக்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கக் கூடியது.

 பின்னர் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இத்துடன் வேகவைத்து வடிகட்டிய அத்தியைப் போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்க வேண்டும். எண்ணெயில் வதக்க வதக்க உருளைக்கிழங்கு பொரியல் போலவே மொறுமொறுவென வர ஆரம்பிக்கும். அந்த பதத்தில் இறக்கி ரசம் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு எனத் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

Tags:    

Similar News