உடற்பயிற்சி

குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கும் சூடான பானங்கள்

Published On 2023-12-31 10:05 GMT   |   Update On 2023-12-31 10:05 GMT
  • குளிர்காலத்தில் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • கிரீன் டீ பருகுவது உடலுக்கு வெப்பத்தை அளிக்கும்.

குளிர்காலத்தில் நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிடுவதற்கு மனம் விரும்பும். அவை அதிக கலோரிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் உடல் எடை கூடுவதற்கு காரணமாகிவிடும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குளிர்காலத்தில் அதிக கலோரிகளை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். உண்ணும் ஒவ்வொரு உணவிலும் கலோரிகளின் அளவுகளை கணக்கில் கொள்ள வேண்டும். சூடான பானத்தை பருக விரும்புபவர்கள் குறிப்பிட்ட சில பானங்களை ருசிக்கலாம். அவை உடல் எடை குறைவதற்கு வித்திடும். அத்தகைய பானங்கள் குறித்து பார்ப்போம்.

கிரீன் டீ

குளிர்காலத்தில் ஒரு கப் கிரீன் டீ பருகுவது உடலுக்கு வெப்பத்தை அளிக்கும். இந்த மூலிகை தேநீரில் உடல் எடையை பெருமளவில் குறைக்க உதவும் சேர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக என்சைம்கள் மற்றும் காபின் உள்ளன. இவை கொழுப்பை கரைப்பதற்கு உதவும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். உடல் எடையை குறைப்பதற்கு வித்திடும்.

எலுமிச்சை - தேன்

எலுமிச்சை, தேன் இவை இரண்டும் உடல் எடையை குறைக்கும் அற்புத நன்மைகளை கொண்டிருக்கின்றன. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கவும். இந்த பானத்தை காலையில் பருகுவது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். குறிப்பாக பசியைக் குறைத்து, குடல் இயக்கத்தை சீராக்கும். எலுமிச்சை இயற்கையாகவே நச்சுக்களை நீக்கக்கூடியது. அதனுடன் தேனும் சேர்வது உடல் எடையை குறைக்க உதவும்.

ஓமம்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் ஓமம் விதையை சேர்த்து பருகலாம். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். குடலின் ஆரோக்கியத்தை பலப்படுத்தும். ஓமம் தண்ணீர் உணவின் மூலம் கலோரிகள் உட்கொள்ளும் அளவை குறைக்க உதவும். உடல் எடையை விரைவாக குறைக்க விரும்புபவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதனை செய்து முடித்த பிறகு ஓமம் தண்ணீரை பருகும் வழக்கத்தை தொடர வேண்டும்.

பெருஞ்சீரகம்

குளிர் காலத்தில் பசி உணர்வை கட்டுப்படுத்தும் தன்மை பெருஞ்சீரகத்துக்கு உண்டு. ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து விட்டு, காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும். இந்த தண்ணீர் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும். அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்களை உறிஞ்சுவதை மேம்படுத்தும். தொடர்ந்து பெருஞ்சீரக தண்ணீரை பருகி வந்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் உதவி புரியும்.

லவங்கப்பட்டை தேநீர்

லவங்கப்பட்டை தேநீர் பருகுவதும் உடல் எடையை குறைக்க வித்திடும். கொதிக்கும் நீரில் ஒரு டீஸ்பூன் தேன், லவங்கப்பட்டை துண்டு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது உடல் எடையை குறைக்க உதவும். இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளம் இருப்பதால் கெட்ட கொழுப்பை எரிக்கவும் செய்யும்.

Tags:    

Similar News