search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மோட்டோ Z (2017) ஸ்மார்ட்போன் உயர் ரக பாதுகாப்பு வசதி கொண்டிருக்கும்
    X

    மோட்டோ Z (2017) ஸ்மார்ட்போன் உயர் ரக பாதுகாப்பு வசதி கொண்டிருக்கும்

    மோட்டோரோலாவின் மோட்டோ Z (2017) ஸ்மார்ட்போனில் கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் ஐரிஸ் ஸ்கேனர் தொழில்நுட்பம் வழங்கப்படலாம்.
    பீஜிங்:

    லெனோவோவின் மோட்டோரோலா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை தொடர்ந்து அந்நிறுவனத்தின் மோட்டோ Z (2017) ஸ்மார்ட்போன் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அந்த வகையில் மோட்டோ Z (2017) ஸ்மார்ட்போன் ஐரிஸ் ஸ்கேனர் கொண்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. காப்புரிமை பதிவுகளில் இருந்து இத்தகவல் வெளியாகியுள்ளது. ஐரிஸ் ஸ்கேனர் லென்ஸ் ஆனது செல்ஃபி கேமரா இருக்கும் இடத்திலேயே பொருத்தப்படும் என காப்புரிமை புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.



    இந்த லென்ஸ் வாடிக்கையாளர்கள் போனினை நேரடியாக பார்க்கவில்லை என்றாலும், ஒரு ஓரத்தில் இருந்து பார்க்கும் போதும் வேலை செய்யுமாம். புதிய ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்பட்டாலும், வழக்கமான கைரேகை ஸ்கேனர் வசதி ஹோம் பட்டனிலேயே வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    சமீபத்தில் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஒன்று சீன இணையத்தளத்தில் XT1650 என்ற மாடல் எண் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் தான் மோட்டோ Z (2017) என கூறப்படுகின்றது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களும், முன்பு வெளியான புகைப்படங்களை ஒப்பிடும் போது இரு சாதனங்களும் ஒரே ஸ்மார்ட்போன் தான் என்பதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ Z (2017) ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் சமீபத்திய 835 சிப்செட் வழங்கப்படலாம் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இத்துடன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.  

    மோட்டோ Z ஸ்மார்ட்போன் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இத்துடன் மோட்டோ மாட்ஸ் வழங்கப்பட்டது. இவற்றில் 16-டாட் மாக்னெடிக் கோல்டு பிளேட் கனெக்டர் வழங்கப்பட்டிருந்தது. இவை எல்ஜி நிறுவனத்தின் ஜி5 ஸ்மார்ட்போன்களை விட எளிமையாக பயன்படுத்த கூடியதாக இருந்தது.  

    சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ Z ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி நீட்டிக்கும் மெமரி வசதி வழங்கப்பட்டது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டது.   

    தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் மோட்டோ Z (2017), மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பார்சிலோனாவில் பிப்ரவரி 27- மார்ச் 2 வரை நடைபெறும் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்றே தெரிவிக்கின்றன.  
    Next Story
    ×