search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பாதுகாப்பான கேலக்ஸி நோட் 8 விரைவில் வெளியாகிறது
    X

    பாதுகாப்பான கேலக்ஸி நோட் 8 விரைவில் வெளியாகிறது

    சாம்சங் கேலக்ஸி நோட் சீரிஸ் போன்களை நிறுத்திக் கொள்வதாக வெளியான தகவல்களை முறியடித்து புதிய நோட் 8 ஸ்மார்ட்போன் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சியோல்:

    சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதை தொடர்ந்து விற்பனையில் இருந்து திரும்ப பெறப்பட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நோட் 7 அந்நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியதை தொடர்ந்து கேலக்ஸி நோட் சீரிஸ் போன்களை அந்நிறுவனம் நிறுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகின. 

    இந்நிலையில் இணையத்தில் வெளியான தகவல்களை பொய்யாக்கும் விதமாக கேலக்ஸி நோட் சீரிஸ் போன்கள் நிறுத்தப்படவில்லை என சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டிஜெ கோ தெரிவித்துள்ளார். 'நோட் சீரிஸ் நலம் விரும்பிகள் அதிகம் பேர் இருக்கின்றனர், இதனால் நோட் 8 இந்த ஆண்டு வெளியிட சாம்சங் முடிவு செய்துள்ளது'. இதோடு 'பாதுகாப்பான, சிறப்பான மற்றும் வித்தியாசமான நோட் 8 வெளியிடப்படும்' என அவர் தெரிவித்துள்ளார் 

    நோட் 7 ஸ்மார்ட்போன் மூலம் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இழப்பு உள்ளிட்டவற்றை தொடர்ந்து மீண்டும் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பது சாம்சங் நிறுவனத்தை பொருத்த வரை சவாலான முடிவாகவே பார்க்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் திரும்ப பெற்ற போது சாம்சங் நோட் சீரிஸ் போன்களை அந்நிறுவனம் நிறுத்தி விடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

    'சாம்சங் நோட் சீரிஸ் போன்களுக்கு மக்கள் மத்தியில் இன்றும் வரவேற்பு இருக்கிறது. இன்றும் பெரும்பாலானோர் சாம்சங் நோட் போன்களை பயன்படுத்தி வருவது சாம்சங் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது', என கோ தெரிவித்துள்ளார். தற்சமயம் வரை கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் குறித்து ஒருசில தகவல்கள் மட்டுமே தெரியவந்துள்ளது.  

    தற்சமயம் வரை சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனிற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. இதோடு இந்த ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டன், பிரெஷர் சென்சிட்டிவ் டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே, டூயல் கேமரா செட்டப் மற்றும் பிக்ஸ்பி செயற்கை உதவியாளர் சேவையை இயக்க பிரத்தியேக வன்பொருள் பட்டன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×