search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்சிலோனா தாக்குதல்: ஐ.நா. பொது செயலாளர், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்
    X

    பார்சிலோனா தாக்குதல்: ஐ.நா. பொது செயலாளர், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்

    ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    நியூயார்க்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பாதசாரிகள் நேற்று சாலையை கடந்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த வேன் ஒன்று பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது. இதனால், அங்கு கடும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    மக்கள் மீது வேனை மோதவிட்டு நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

    பார்சிலோனா தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான ஸ்பெயின் அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் உறுதுணையாக இருக்கும். ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சில் கூறுகையில், “ஸ்பெயினில் நடந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது மற்றும் கோழைத்தனமானது’’ என குறிப்பிட்டுள்ளது.

    இதேபோல், ஸ்பெயினில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், “பார்சிலோனாவில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஸ்பெயினுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம். எந்த
    கடினமான சூழ்நிலையிலும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜெனரலை வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில், பார்சிலோனாவில் உள்ள பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் கூறுகையில், “பார்சிலோனாவில் நடந்த தாக்குதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இருபத்தி ஆறு பேர் காயம் அடைந்துள்ளனர்’’ என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×