search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை தாக்குதல் வழக்கு: இந்தியா விடுத்த கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்
    X

    மும்பை தாக்குதல் வழக்கு: இந்தியா விடுத்த கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்

    கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதல் வழக்கை மறு விசாரணை செய்யுமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் அரசு நிராகரித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்திய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றதைப் போல, பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் தனியே விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்காக இந்தியத் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 24 சாட்சிகளை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இதற்கு, இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயீதையும், லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர் ஜகியூர் ரஹ்மான் லக்வியையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்திவந்தது.



    ஹபீஸ் சயீதுக்கு எதிராக உறுதியான ஆதாரத்தை இந்தியா அளித்தால், அவரை விசாரிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாகவும், லக்விக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததாலேயே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்  பாகிஸ்தான் உள்துறை முன்னர் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், தற்போது இவ்வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி, “இவ்வழக்கு மேம்பட்ட முறையில் நடைபெற்று வருகின்றது. நாங்கள் கோரியிருந்த இந்திய சாட்சிகள் 24 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணி தவிர, இறுதிகட்டத்தில் இருக்கும் இவ்வழக்கை மறு விசாரணை செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், “ மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப், ஹபீஸ் சயீதை சந்தித்துள்ளார் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. தினமும் நூற்றுக்கணக்கான பேர் அவரை சந்திக்கின்றனர். இவ்வழக்கில் உள்ள சிக்கல்களை தீர்க்க இந்தியா அந்த 24 சாட்சிகளையும் இங்கு அனுப்ப வேண்டும்” என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்தியா குற்றம் சாட்டியிருந்த ஹபீஸ் சயீது உள்ளிட்ட 5 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு அண்மையில் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×