search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றங்களை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
    X

    பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றங்களை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

    பாகிஸ்தானில் ராணுவ நீதிமன்றங்களை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்காக பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் 2014ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து தீவிரவாத வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக  2015ம் ஆண்டு ராணுவ நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த நீதிமன்றங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

    இந்த நீதிமன்றங்களின் செயல்பாட்டுக் காலம் ஜனவரி மாதம் 7-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், பல்வேறு தீவிரவாதிகளுக்கு தண்டனை வழங்கும் வகையில் ராணுவ நீதிமன்றங்களை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என ராணுவம் வலியுறுத்தி வந்தது. எனவே, பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தலான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ராணுவ நீதிமன்றங்களின் ஆயுட்காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்தது.

    இதற்காக பாகிஸ்தான் ராணுவச் சட்டம் மற்றும் 28-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாக்கள் பாகிஸ்தான் தேசிய சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் மேல் சபையான செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து, ஜனாதிபதி மம்னூன் உசைனின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புதிய சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி இன்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.



    பாகிஸ்தானில் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் இதுவரை 161 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. அதில், 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 116 பேருக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நீதிமன்றங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×