search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை மாற்ற முடிவு? அரசுடன் மோதல் எதிரொலி
    X

    இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை மாற்ற முடிவு? அரசுடன் மோதல் எதிரொலி

    அரசுடன் மோதல் எதிரொலி காரணமாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை மாற்ற முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
    இஸ்லாமாபாத்:

    இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக அப்துல் பாசித் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். இந்திய அரசுக்கு எதிராக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்த அவர், தனது 3 ஆண்டுகால பணிக்காலத்தை தற்போது நிறைவு செய்து விட்டார்.

    இந்த நிலையில் அப்துல் பாசித்துக்கு கீழ் பணியாற்றி வந்த டெக்மினா ஜன்ஜுவா என்ற அதிகாரி, தற்போது பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள அப்துல் பாசித் பாகிஸ்தான் அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

    எனவே அவரை இந்திய தூதராக நீட்டிக்க பாகிஸ்தான் அரசு விரும்பவில்லை என கூறப்படுகிறது. அவரை இந்திய தூதர் பொறுப்பில் இருந்து மாற்றிவிட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு தூதராக நியமனம் செய்ய பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் அவர் விரைவில் மாற்றப்படலாம் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

    மேலும் ஜன்ஜுவாவுக்கு கீழ் பணிபுரிய பாசித்துக்கும் விருப்பம் இல்லை என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு பதிலாக இந்தியாவுக்கான புதிய தூதராக, மூத்த வெளியுறவு அதிகாரி சொகைல் மக்மூத், வெளியுறவு அமைச்சக முன்னாள் செய்தி தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம் ஆகியோரின் பெயர்களை பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது.

    Next Story
    ×