search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 வருடங்களுக்கு பிறகு ராணி எலிசபெத்துடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு
    X

    20 வருடங்களுக்கு பிறகு ராணி எலிசபெத்துடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு

    லண்டனில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து இடையிலான கலாசார விழாவில் இந்திய சார்பில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் ராணி எலிசபெத்தை சந்தித்தார்.
    லண்டன்:

    லண்டனில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து இடையிலான கலாசார விழாவில் இந்திய சார்பில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் ராணி  எலிசபெத்தை சந்தித்தார்.

    இந்தியா-இங்கிலாந்து இடையேயான கலாசார ஆண்டு வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடந்தது.  விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கிவைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் நடிகர் கமல்ஹாசன் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் ராணி  எலிசபெத்தை சந்தித்தார். அப்போது இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.



    சரித்திர கதையம்சத்தை கொண்ட கமல்ஹாசனின் லட்சியப்படமான ‘மருதநாயகம்’ படப்பிடிப்பு 1997-ம் ஆண்டு இந்தியாவில்  நடந்தபோது, அதனை ராணி எலிசபெத் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்த காட்சிகளுடன் இதன் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடந்த நிலையில் நிதி நெருக்கடியால் பட வேலைகள் திடீரென்று நிறுத்தப்பட்டது.

    மருதநாயகம் படத்தை தொடர்ந்து படமாக்கும் முயற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். ராணி எலிசபெத்தை சந்தித்த போது  மருதநாயகம் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை கமல்ஹாசன் நினைவூட்டினார். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர்கள்  உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.



    மேலும் இந்திய சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சுரேஷ் கோபி, கிரிக்கெட் பிரபலம் கபில் தேவ், பாடகரும் நடிகருமான  குர்தாஸ் மன், ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் ஆரோரா, மணீஷ் மல்கோத்ரா மற்றும் அனோஷ்கா ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,

    “கலாசார விழாவில் ராணி எலிசபெத்தை சந்தித்தேன். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார். மன்னர் எடின்பரோவும்  ஆரோக்கியமாக இருக்கிறார். ராணி எலிசபெத் இந்தியாவுக்கு வந்தபோது எனது படப்பிடிப்பு அரங்குக்கு வந்து இருந்தார். அதுகுறித்து  அவரிடம் நான் நினைவுபடுத்தினேன். ராணி எலிசபெத் தனது வாழ்நாளில் கலந்து கொண்ட ஒரே படப்பிடிப்பு என்னுடைய  படப்பிடிப்புதான். கூட்டம் அதிகமாக இருந்ததால் எங்கள் உரையாடல் சிறியதாகவே இருந்தது”. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
    Next Story
    ×