search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் இந்தியர் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது: வெள்ளை மாளிகை அறிக்கை
    X

    அமெரிக்காவில் இந்தியர் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது: வெள்ளை மாளிகை அறிக்கை

    அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் உள்ள மதுபான விடுதியில் இந்திய என்ஜினீயர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றும் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா(32) என்பவர் கடந்த 23-ம் தேதி அதே பகுதியில் உள்ள ஆஸ்டின் மதுபான விடுதியில் அமர்ந்தபடி, கான்சாஸ் பல்கலைக்கழக அணி விளையாடிய கூடைப் பந்தாட்ட போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து, ரசித்து கொண்டிருந்தனர்.

    மும்முரமான ஆட்டத்தின்போது அங்கே இருந்த ஒருவன், திடீரென தனது கைத்துப்பாக்கியை உருவி அருகில் இருந்த இந்தியர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். ‘என் நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூவியபடி அவன் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் ஸ்ரீனிவாஸ் என்ற என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

    அவரை காப்பாற்ற முயன்ற சகப் பணியாளரான இயன் கிரில்லாட்(24) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்துக்கு பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற கொலையாளி, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் மிசோரியில் உள்ள மதுபான விடுதியில் குடித்துவிட்டு, துப்பாக்கிச் சூட்டில் இருவரை கொன்று விட்டதாக உளறியுள்ளான்.


    ஆடம் புரின்டன்

    இதை அறிந்த அந்த விடுதியின் பணியாளர் அளித்த தகவலையடுத்து, விரைந்துவந்த போலீசார் கொலையாளியை கைது செய்தனர். கைதான ஆடம் புரின்டன்(51) முன்னாள் கடற்படை வீரர் என தெரியவந்துள்ள நிலையில் இந்த இனவெறி சார்ந்த படுகொலை தொடர்பான தகவல் கிடைத்ததும், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    இச்சம்பவத்தால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.  ஸ்ரீனிவாஸ் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த கொடூர தாக்குதலுக்கு வேதனை அளிப்பதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, நேற்று நடைபெற்ற வழக்கமான பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சியன் ஸ்பைசர், ‘கன்சாஸ் மாநிலத்தில் இருந்து வரும் முதல்கட்ட தகவல்கள் வேதனை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×