search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 56 பேர் கொன்று குவிப்பு
    X

    சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 56 பேர் கொன்று குவிப்பு

    அல்-பாப் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து கூட்டுப்படையின் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில் தீவிரவாதிகள் 56 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
    பெய்ரூட்:

    சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சிரியாவின் அண்டை நாடான துருக்கியும் இந்த கூட்டுப்படையில் இணைந்தது.

    துருக்கி ராணுவம் அங்கு தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக சிரியாவில் துருக்கியின் எல்லையையொட்டி அமைந்து உள்ள ஐ.எஸ். இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்பாப், டாதிப், காபசின் பிஸாகா உள்ளிட்ட பகுதிகளில் துருக்கி ராணுவம் இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    நேற்று முன்தினம் அல்-பாப் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து கூட்டுப்படையின் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. அதே நேரம் துருக்கி ராணுவம் அங்கு தரை வழி தாக்குதலையும் தொடுத்தது. ஒரே நேரத்தில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தப்பட்டதால் அதனை சமாளிக்க முடியாமல் தீவிரவாதிகள் நிலைகுலைந்து போயினர்.

    இந்த அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 56 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலின் போது தீவிரவாதிகளின் முகாம்கள், ஆயுதகிடங்குகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்களும், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனங்களும் நிர்மூலமாக்கப்பட்டன.

    இது அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கான பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. 
    Next Story
    ×