search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் தீவிரவாதிதான் என பாகிஸ்தான் ஒப்புதல்
    X

    மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் தீவிரவாதிதான் என பாகிஸ்தான் ஒப்புதல்

    மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் தீவிரவாதிதான் என ஒப்புக்கொள்ளும் விதத்தில் அவரது பெயரை தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலில் பாகிஸ்தான் சேர்த்துள்ளது.
    லாகூர்:

    மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் தீவிரவாதிதான் என ஒப்புக்கொள்ளும் விதத்தில் அவரது பெயரை தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலில் பாகிஸ்தான் சேர்த்துள்ளது.

    மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக நுழைந்து குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவர் ஹபீஸ் சயீத்.

    லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர். அந்த இயக்கம் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத் தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்.

    ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த மாதம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அத்துடன் அவரும், அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஹபீஸ் சயீத் மீதான பிடி மேலும் இறுகி உள்ளது. அவர் தீவிரவாதிதான் என பாகிஸ்தான் ஒப்புக்கொள்கிற வகையில், அவரது பெயர் தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.

    அவருடன் அவரது நெருங்கிய கூட்டாளிகளான காஜி காசிப், பைசாலாபாத்தை சேர்ந்த அப்துல்லா ஒபைது, முரித்கேயை சேர்ந்த ஜாபர் இக்பால், அப்துர் ரகுமான் ஆகிய நால்வரது பெயர்களும் தீவிரவாத தடை சட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டன. பஞ்சாப் மாகாண அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், பாகிஸ்தானில் இருந்து வெளிவருகிற ‘தி டான்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில், “மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி ஹபீஸ் சயீத், காஜி காசிப், அப்துல்லா ஒபைது, ஜாபர் இக்பால், அப்துர் ரகுமான் ஆகிய 5 பேரது பெயர்கள் தீவிரவாத தடை சட்டத்தின் 4-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அட்டவணையில் 1,450 பேர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன” என குறிப்பிட்டார்.

    இந்த 5 பேரையும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், ‘ஜமாத் உத் தாவா மற்றும் பலாஹ் இன்சானியத் இயக்கங்களின் தீவிர உறுப்பினர்கள்’ என கூறி உள்ளது.

    பாகிஸ்தானி 1997-ம் ஆண்டு இயற்றப்பட்ட தீவிரவாத தடுப்பு சட்டம்தான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை அரசாங்கத்துக்கு வழங்கி உள்ளது. 
    Next Story
    ×