search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனாமா கேட் ஊழல் வழக்கு: பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் மகள் பதில் மனு
    X

    பனாமா கேட் ஊழல் வழக்கு: பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் மகள் பதில் மனு

    ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் மகள் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    இஸ்லாமாபாத்:

    வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் ரகசியமாக முதலீடு செய்திருப்பதாகவும், வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள தகவல்கள், உலகமெங்கும் பெரும்பர பரப்பை ஏற்படுத்தின.

    இந்த ஊழலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக புகார் எழுந்தது. இதில் நவாஸ் ஷெரீப்பின் பதவியைப் பறிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான், வக்கீல் தாரிக் ஆசாத், ஜமாத் இ இஸ்லாமி (ஜி) தலைவர் சிராஜூல் ஹக், அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஷீத் அகமது ஆகியோர் வழக்கு தொடுத்துள்ளனர்.

    இந்த வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நவாஸ் ஷெரீப் மகள் மர்யம் நவாஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், “நான் 1992-ம் ஆண்டு, கேப்டன் சப்தாரை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவருடன் வாழ்ந்து வருகிறேன். என் தந்தையை சார்ந்து வாழவில்லை” என கூறி உள்ளார்.

    மேலும், கடந்த 5 ஆண்டுகளாக தான் செலுத்தி வந்துள்ள வரி பற்றிய விவரங்களை அவர் தந்துள்ளார்.

    ராய்விண்ட் எஸ்டேட் பகுதியில், தந்தைவழி பாட்டி சொத்தாக தனக்கு 5 வீடுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே நவாஸ் ஷெரீப்பின் வக்கீல் மக்தூம் அலி கான் தனது வாதத்தை தொடர்ந்தார். நேற்றைய வாதத்தின்போது அவர், “அரசியல் சாசனம் பிரிவு 249, பிரதமர் அலுவலகத்துக்கு வழக்கு தொடர்வதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் பொத்தாம்பொதுவாக அந்த விதிவிலக்கை தரவில்லை” என குறிப்பிட்டார்.
    Next Story
    ×