search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைக் பென்ஸ்
    X
    மைக் பென்ஸ்

    இலங்கை அதிபருடன் வருங்கால அமெரிக்க துணை அதிபர் தொலைபேசியில் ஆலோசனை

    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுடன் அமெரிக்காவின் வருங்கால துணை அதிபர் மைக் பென்ஸ் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார்.
    கொழும்பு:

    அமெரிக்காவின் துணை அதிபராக வரும் ஜனவரி மாதம் பதவியெற்கவுள்ள மைக் பென்ஸ் நேற்று மாலை வாஷிங்டன் நகரில் இருந்து தொலைபேசி மூலம் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை தொடர்பு கொண்டு பேசினார்.

    இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தியதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் மற்றும் அந்நாட்டின் வருங்கால துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோருக்கு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா வாழ்த்து தெரிவித்ததாகவும், அமெரிக்காவுக்கு வரும்படி மைத்ரிபாலா சிறிசேனாவுக்கு மைக் பென்ஸ் அழைப்பு விடுத்ததாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்தவாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மைத்ரிபாலா சிறிசேனா, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு நடத்திவரும் இலங்கை அரசின் மீதான போர்க்குற்ற விசாரணையை கைவிடும்படி வலியுறுத்துமாறு அமெரிக்காவின் வருங்கால அதிபர் டிரம்ப்புக்கு கடிதம் எழுதப்போவதாக குறிப்பிட்டிருந்த நிலையில் மைத்ரிபாலா சிறிசேனாவுடன் அமெரிக்காவின் வருங்கால துணை அதிபர் மைக் பென்ஸ் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

    முன்னதாக, கடந்த மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றபோது இலங்கையில் வாழும் தமிழர்கள் ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெற பூஜைகள் நடத்தியது நினைவிருக்கலாம்.


    Next Story
    ×