search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க புதிய அதிபர் டிரம்புடன் நவாஸ் ஷெரீப் பேச்சு
    X

    அமெரிக்க புதிய அதிபர் டிரம்புடன் நவாஸ் ஷெரீப் பேச்சு

    அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்புடன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
    இஸ்லாமாபாத்:

    அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்புடன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என்பது பற்றி முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு சாதகமானவராக இருப்பார் என பாகிஸ்தானில் பீதி நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டிரம்புடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த தொலைபேசி உரையாடல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம், ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    பாகிஸ்தானின் நிலுவையில் உள்ள பிரச்சினைகளில் தீர்வு காண்பதற்கு, நான் என்ன பங்கு ஆற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். அதை ஒரு கவுரவமாக கருதுகிறேன். நான் தனிப்பட்ட முறையில் அதை செய்வேன். நான் பதவி ஏற்பதற்கு முன்பு வரையில் எந்த நேரத்திலும் நீங்கள் தாராளமாக என்னை அழைத்து பேசலாம் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் கூறினார்.

    “நவாஸ் ஷெரீப் நல்ல மதிப்பை பெற்றுள்ளவர்” எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

    மேலும், “நீங்கள் ஒரு பயங்கரமான மனிதர். நீங்கள் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் செயலாற்றிக்கொண்டிருப்பதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது. உங்களை விரைவில் சந்திப்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன். பாகிஸ்தானின் பிரதமர் என்ற முறையில் உங்களுடன் நான் பேசிக்கொண்டிருக்கிறபோது, நீண்ட காலம் அறிமுகமான ஒருவருடன் பேசிய உணர்வை பெறுகிறேன்” என்றும் நவாஸ் ஷெரீப்பிடம் டிரம்ப் தெரிவித்தார்.

    அத்துடன், “பாகிஸ்தான் ஒரு அற்புதமான நாடு. அது, மிக பிரமாண்டமான வாய்ப்புகளை கொண்ட நாடு. பாகிஸ்தானியர், அறிவார்ந்த மக்கள்” எனவும் டிரம்ப் கூறினார்.பாகிஸ்தானுக்கு வருமாறு டிரம்புக்கு நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார்.

    அதற்கு டிரம்ப், “அந்த அற்புதமான நாட்டுக்கு நான் வருவதற்கு விரும்புகிறேன்” என பதில் அளித்தார்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் இது தொடர்பாக முரண்பட்ட கருத்துகளை டிரம்பின் ஆலோசகர் வெளியிட்டுள்ளார். டிரம்பும், நவாஸ் ஷெரீப்பும் பேசிக்கொண்டது பற்றிய பாகிஸ்தானின் தகவல்கள் பொருத்தமற்றவை என அவர் கூறி உள்ளார்.இரு தலைவர்களின் தொலைபேசி உரையாடல் பற்றி டிரம்ப் ஆலோசனை குழுவினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-

    ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இன்று (நேற்று முன்தினம்) பேசினார்கள். எதிர்காலத்தில் பணி ரீதியில் எப்படி ஒரு வலுவான உறவை இரு நாடுகளும் வைத்துக்கொள்வது என்பது பற்றி ஆக்கப்பூர்வமான பேச்சாக அது அமைந்தது.

    பாகிஸ்தான் பிரதமருடன் தனிப்பட்ட முறையில் நீடித்த, வலுவான உறவை வளர்த்துக்கொள்ள ஆவலாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் விரும்புகிற ஆக்கப்பூர்வமான பங்களிப்பை தான் செய்வதற்கு தயாராக இருப்பதாக நவாஸ் ஷெரீப்பிடம் டிரம்ப் தெரிவித்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானைப்பற்றியும், நவாஸ் ஷெரீப்பை பற்றியும் டிரம்ப் வானளாவ புகழ்ந்துரைத்ததாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பது பற்றி, டிரம்ப் ஆலோசனை குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×