search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரகசிய முகவரி மூலம் ஒபாமா பயன்படுத்திய இமெயில்: விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது
    X

    ரகசிய முகவரி மூலம் ஒபாமா பயன்படுத்திய இமெயில்: விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது

    அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்னர் ரகசிய முகவரி மூலம் பயன்படுத்திய இமெயில் விபரங்களை விக்கிலீக்ஸ் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.
    வாஷிங்டன்:

    2008-ம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஒபாமாவின் தேர்தல் பிரசார செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் ஜான் பொடெஸ்ட்டா.

    தற்போது, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரியின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக இவர் பணியாற்றி வருகிறார்.

    இவருடைய இமெயில்களுக்குள் சமீபத்தில் ஊடுருவிய வலைத்தள ‘ஹேக்கர்ஸ்’ சுமார் 23 ஆயிரம் கடித தொடர்புகளை களவாடியுள்ளனர். அவற்றில் அமெரிக்க அதிபர் பதவிக்காக கடந்த 2008-ம் ஆண்டு முதன்முதலாக போட்டியிட்டபோது ஒபாமாவுக்கும், ஜான் பொடெஸ்ட்டாவுக்கும் இடையில் நடைபெற்ற பல கடிதப் பரிமாற்றங்களும் காணப்படுகின்றன.

    குறிப்பாக, கடந்த 4-11-2008-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற நாளன்று ஒபாமாவுக்கு அவரது ஆலோசகர்கள் சார்பில் ஜான் பொடெஸ்ட்டா அனுப்பிய ஒரு அறிவுரை கடிதத்தை தற்போது விக்கிலீக்ஸ் ‘சாம்பிள்’ ஆக வெளியிட்டுள்ளது.

    ‘உலகளாவிய அளவில் பொருளாதாரச் சரிவு தொடர்பாக விவாதிப்பதற்காக வரும் நவம்பர் 15-ம் தேதி (15-11-2008) நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் கூட்டத்துக்கு வருமாறு தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் உங்களுக்கு அழைப்பு அனுப்பக்கூடும். ஆனால், அதில் நீங்கள் கலந்துகொள்ள கூடாது என நாங்கள் ஒருமனதாக தீர்மானித்துள்ளோம்’ என அந்த இமெயில் கடிதத்தில் ஜான் பொடெஸ்ட்டா குறிப்பிட்டுள்ளார்.

    அவ்வாறே, அந்நாள் இலினாய்ஸ் மாநில எம்.பி.யாக இருந்த ஒபாமாவும் ஜார்ஜ் புஷ்ஷின் அழைப்பை நிராகரித்து விட்டார்.

    இதுபோன்ற மேலும் சில முக்கிய கடிதங்களை விரைவில் வெளியிடவுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

    எனினும், bobama@ameritech.net. என்ற அதிபர் ஒபாமாவின் இமெயில் முகவரி இன்றளவும் உயிர்ப்புடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.
    Next Story
    ×