search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுடனான உறவில் சிக்கல்: பாகிஸ்தான் சினிமா துறை 70 சதவிதம் இழப்பை சந்திக்கும் அபாயம்
    X

    இந்தியாவுடனான உறவில் சிக்கல்: பாகிஸ்தான் சினிமா துறை 70 சதவிதம் இழப்பை சந்திக்கும் அபாயம்

    உரி தாக்குதலையடுத்து இந்தியாவுடனான உறவு மேலும் விரிசல் அடைந்துகொண்டே போவதால் பாகிஸ்தான் நாட்டின் சினிமா தொழில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், இதன்மூலம் அத்துறைக்கு சுமார் 70 சதவீதம்வரை பொருளாதார இழப்பு ஏற்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நடிகர்-நடிகையர் மற்றும் இசைக்கலைஞர்களை இங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற கோரிக்கை உரி தாக்குதலுக்கு பின்னர் வலுத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டிலும் இந்திய சினிமாக்களுக்கு தடை விதிக்கபடலாம் என பேசப்படுகிறது.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் வெளியான இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய சம்பவங்களை சித்தரிக்கும் திரைப்படத்தின் பாகிஸ்தான் வினியோக உரிமையை வாங்கி வைத்துள்ள நபர் தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானில் இந்த படத்தை வெளியிட்டால் வசூல் தேறாது என்பதுடன் பதற்றமும் அதிகரிக்கும் என கருதி படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தை கைவிட்டுள்ளார்.

    இதேபோல், பாகிஸ்தானில் உள்ள இதர இந்திப்பட வினியோகஸ்தர்களும் முடிவு செய்தால் பாகிஸ்தான் நாட்டு சினிமா தொழில் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான விரிசல் மேலும் மோசமானால் இந்திய சினிமாக்களை தீவிரமாக தடைசெய்ய பாகிஸ்தான் அரசு முன்வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    பாகிஸ்தானில் அதிகப்பட்சமாக இந்திய சினிமாக்களே வெளியிடப்பட்டு வருகிறது. இந்திய சினிமாக்கள் பாகிஸ்தான் மார்க்கெட்டில் ரூ. 100 கோடி வசூலை ஈட்டி சாதனையும் படைத்து உள்ளது.

    எனவே, பாகிஸ்தான் சினிமா துறைக்கு உள்ள ஒரே வரம் இந்திய சினிமாக்கள் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களை வெளியிடுவது மட்டும்தான். பாகிஸ்தானின் சினிமா துறைக்கு சுமார் 70 சதவித தொழில் வருவாய் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களை சார்ந்ததாக உள்ளது. இந்திய சினிமாக்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதிக்குமானால் இந்த வருவாய் முற்றிலுமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டின் பிரபலமான சினிமா வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×