search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவில் மீண்டும் உச்சகட்ட உள்நாட்டுப் போர்: ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது
    X

    சிரியாவில் மீண்டும் உச்சகட்ட உள்நாட்டுப் போர்: ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது

    சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா - ரஷியா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாததால் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கும் அலெப்போ நகரை போராளிகளிடம் இருந்து மீட்பதற்காக அந்நாட்டின் விமானப்படைகள் நடத்திவரும் ஆவேச தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகி வருவது தொடர்பாக ஆலோசிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று அவசரமாக கூடுகிறது
    நியூயார்க்:

    சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா - ரஷியா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாததால் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கும் அலெப்போ நகரை போராளிகளிடம் இருந்து மீட்பதற்காக அந்நாட்டின் விமானப்படைகள் நடத்திவரும் ஆவேச தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகி வருவது தொடர்பாக ஆலோசிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று அவசரமாக கூடுகிறது

    உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ரஷியாவின் முன்முயற்சியால் சமீபத்தில் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் அமலில் உள்ளபோதே அங்குள்ள போராளிகள் முகாம்மீது சிரியா மற்றும் ரஷியா நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் பலர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

    சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக அங்குள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற லாரிகள் மீதும் நிவாரணப் பொருட்களை சேமித்து வைத்த கிட்டங்கி மீதும் விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் பின்னணியில் ரஷியா உள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.

    இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அமெரிக்கா - ரஷியா வெளியுறவுத்துறை மந்திரிகளுக்கு இடையில் நியூயார்க் நகரில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இருபதுக்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

    சிரியாவுக்குள் ரஷியாவின் போர் விமானங்கள் பறப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என இந்த கூட்டத்தின்போது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி வலியுறுத்தினார். இதை ஏற்றுக்கொள்ள ரஷிய நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கேய் லாவ்ராவ் மறுத்து விட்டார்.

    இதனால், எவ்வித முன்னேற்றமும் இன்றி இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதற்கிடையே, சிரியாவில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றான அலெப்போ நகரை கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து போராளிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா - ரஷியா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாத நிலையில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கும் அலெப்போ நகரை போராளிகளிடம் இருந்து மீட்பதற்காக அரசுப் படைகள் அங்கு நுழைந்துள்ளன.

    ராணுவ டாங்கிகள் துணையுடன் காலாட்படையினர் அலெப்போ நகரை நோக்கி முன்னேறி சென்றுகொண்டுள்ள நிலையில் இங்குள்ள பஸ்தான் அல் - கஸ்ர் மாவட்டத்தில் உள்ள போராளிகளின் முகாம்கள் மீது சிரியா விமானப்படைகளும்தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன.

    இந்த அதிரடி தாக்குதலால் இங்குள்ள ஒரு முக்கிய தெருவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தீபிடித்து எரிந்து கொண்டிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

    இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற விமான தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 47 பேர் பலியானதாகவும், அங்கு தொடரும் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும் பலநூறு பேர் காயம் அடைந்ததாகவும் சிரியாவில் உள்நாட்டுப்போர் நிலவரங்களை கண்காணித்துவரும் பிரிட்டன் நாட்டு மனித உரிமை பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    பீப்பாய் குண்டுகள் மற்றும் கொத்து குண்டுகளையும், ஆபத்தான போர் ஆயுதங்களையும் சிரியா ராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாகவும் போராளி குழுக்கள் குற்றம்சாட்டி வருகின்றன. நேற்றைய குண்டுவீச்சில் அலெப்போ நகரில் உள்ள சுமார் இரண்டரை லட்சம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நீரேற்ற நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மற்றொரு நீரேற்ற நிலையத்தை போராளிகள் முடக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், சிரியாவில் நிலைமை தீவிரம் அடைந்து வருவதால் இதுதொடர்பாக விவாதிக்கவும், அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்தன.

    இதனையேற்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
    Next Story
    ×