search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்போம்: சீனா உறுதி
    X

    பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்போம்: சீனா உறுதி

    அன்னிய நாடு எதுவும் வலிய சண்டைக்கு வந்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்போம் என்று சீனா உறுதி அளித்துள்ளது.
    லாகூர்:

    அன்னிய நாடு எதுவும் வலிய சண்டைக்கு வந்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்போம் என்று சீனா உறுதி அளித்துள்ளது.

    பாகிஸ்தான், தன் மண்ணில் இயங்குகிற பயங்கரவாத அமைப்புகளுக்கு இன்றளவும் ஆதரவு அளித்து வருகிறது. அரசின் ஆதரவுடன் பயங்கரவாத அமைப்புகள், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, ஆயுதங்களையும் தந்து இந்தியாவில் எல்லை தாண்டி வந்து தாக்குதல்கள் நடத்த அனுப்பி வைக்கிறது. இது தொடர்கதையாகி வருகிறது.

    சமீபத்தில்கூட காஷ்மீரில் உரியில் உள்ள இந்திய ராணுவ முகாமில் வீரர்கள் அதிகாலையில் ஓய்வு எடுத்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கோழைத்தனமாக நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவித்து, அந்த நாட்டை தனிமைப்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என பாகிஸ்தானுக்கு எதிராக ஐ.நா. சபையும் நிலைப்பாடு கொண்டுள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவுடன் தொடர்ந்து எல்லை தகராறில் ஈடுபட்டு வரும் சீனா, பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியும், பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷாபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    அவரை வாழ்த்துவதற்காக லாகூருக்கான சீன துணை தூதர் யு போரன் நேரில் சந்தித்தார். அப்போது அவர், பாகிஸ்தானுக்கு சீனாவின் ஆதரவை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஷாபாஸ் ஷெரீப்பிடம், யு போரன் பேசும்போது, “காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் பக்கம் இருந்திருக்கிறோம். இனியும் இருப்போம். காஷ்மீரில் ஆயுதம் ஏந்தாத காஷ்மீர் மக்கள் மீது வன்கொடுமையை ஏவி விடுவதை நியாயப்படுத்த முடியாது. காஷ்மீர் மக்களின் விருப்பப்படிதான் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்” என கூறினார்.

    மேலும், “எந்த வெளிநாடாவது பாகிஸ்தானிடம் வலிய சண்டைக்கு வந்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவு தருவோம்” எனவும் கூறினார்.

    இந்த தகவல்களை பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியின் செய்திக்குறிப்பை மேற்கோள் காட்டி பாகிஸ்தானில் இருந்து இயங்குகிற ‘டான்’ இணைய தளம் வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×