search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம் (2014)
    X
    கோப்புப்படம் (2014)

    அதிகரித்து வரும் பூசல்: டெல்லியில் நடத்த திட்டமிட்டிருந்த பொருட்காட்சியை ரத்து செய்தது பாகிஸ்தான்

    இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பூசலின் எதிரொலியாக டெல்லியில் அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டிருந்த பொருட்காட்சியை ரத்து செய்துள்ளதாக பாகிஸ்தான் இன்று தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பூசலின் எதிரொலியாக டெல்லியில் அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டிருந்த பொருட்காட்சியை ரத்து செய்துள்ளதாக பாகிஸ்தான் இன்று தெரிவித்துள்ளது.

    எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படையினர் அடிக்கடி போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்திவரும் துப்பாக்கிச் சூடு, மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறையினரின் ஒத்துழைப்புடன் இந்திய மண்ணில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திவரும் தற்கொலைப்படை தாக்குதல்களால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நட்புறவில் சமீபகாலமாக விரிசல் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், கடந்த 18-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் உள்ள ராணுவ தலைமையகத்தினுள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேரை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை நேரடியாக இந்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

    முன்னதாக, கடந்த 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அரசின் சார்பில் டெல்லியில் வர்த்தக பொருட்காட்சி நடத்தப்பட்டது. ’ஆலிஷான் பாகிஸ்தான் வர்த்தக பொருட்காட்சி’ என பெயரிடப்பட்ட இந்த கண்காட்சியின் நோக்கம் இருநாடுகளுக்கு இடையிலான தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோரை ஒன்றிணைப்பதாகும் என பாகிஸ்தான் வர்த்தக மேம்பாட்டு ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

    இவ்வகையில், உரி தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பூசல்கள் அதிகரித்துள்ளதால் டெல்லியில் வரும் அக்டோபர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ’ஆலிஷான் பாகிஸ்தான் வர்த்தக பொருட்காட்சி’ ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வர்த்தக மேம்பாட்டு ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×