search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா. சபையில் நவாஸ்ஷெரீப் பேச்சுக்கு இந்தியா கண்டனம்
    X

    ஐ.நா. சபையில் நவாஸ்ஷெரீப் பேச்சுக்கு இந்தியா கண்டனம்

    ஐ.நா. சபையில் நவாஸ்ஷெரீப் பேச்சுக்கு இந்திய வெளிவிவகாரத்துறை துணை மந்திரி எம்.ஜே. அக்பர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    ஜெனீவா:

    காஷ்மீரில் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 20 ராணுவ வீரர்களை கொன்றதை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் உரை நிகழ்த்தினார். தனது உரையில் அவர், இந்தியாவை கடுமையான குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது:-

    இந்தியாவுடன் பாகிஸ்தான் எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது. நாங்கள் ஒரு மைல் தூரம் அடி முன்னெடுத்து வைத்தாலும், இந்தியா பின்னோக்கி செல்கிறது. ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை விதித்து இந்தியா முட்டுக்கட்டை போடுகிறது.

    பாகிஸ்தானே தீவிரவாதிகளால் பிரச்சினைகளில் சிக்கி உள்ளது. அவர்களால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால் தீவிரவாதிகளை தூண்டி விடுவதாக இந்தியா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது. இது தவறான குற்றச்சாட்டு.

    காஷ்மீரை பொறுத்தவரை அந்த பகுதியை இந்தியா சட்டம் விரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அங்கு சுதந்திர போராட்டம் நடந்து வருகிறது. காஷ்மீர் மக்கள் தங்களை யார் ஆள்வது என்பது குறித்து சுயநிர்ணயம் செய்து கொள்ள உரிமை இருக்கிறது. இதற்காக அவர்கள் போராடி வருகிறார்கள். அங்கு நடப்பது சுதந்திர போராட்டம்.

    புர்கான்வானி (இந்திய படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி) காஷ்மீரின் இளைஞர்களின் தலைவர். அவர் சுதந்திரத்திற்காக போராடியவர். ஆனால் அவரை இந்திய ராணுவம் கொலை செய்துவிட்டது. அவர் தனது மக்களுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார்.

    இவ்வாறு நவாஸ்ஷெரீப் பேசினார்.

    அவரது பேச்சுக்கு இந்திய வெளிவிவகாரத்துறை துணை மந்திரி எம்.ஜே. அக்பர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    புர்கான்வானி தீவிரவாதி என்பது எல்லோருக்கும் தெரிந்த வி‌ஷயம். ஆனால் அவரை சுதந்திரபோராட்ட தியாகி போல நவாஸ்ஷெரீப் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.

    பாகிஸ்தான் தொடர்ந்து இதுபோன்ற கருத்துக்களையே கூறி வருகிறது. நவாஸ்ஷெரீப் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு ஒருமைல் தூரம் முன்னேறி வந்தால் இந்தியா பின்வாங்கி செல்வதாக கூறியிருக்கிறார். பாகிஸ்தான் ஒரு மைல் தூரம் முன்னேறி வந்ததை நாங்கள் இதுவரை பார்க்கவில்லை. அவர்கள் முன்னேறி வந்தால் தானே அடுத்த கட்டத்தை பற்றி பேச முடியும்.

    அவர்கள் ஒரு கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தை என்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஐ.நா. சபையில் அவர் பேசியிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் முரண்பாடானது. இந்தியா இதை நிராகரிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவுக்கான ஐ.நா. சபை முதன்மை செயலாளர் யனாம்காம்பீர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் உலக தீவிரவாத இயக்கங்களின் மைய பகுதியாக செயல்படுகிறது. அவர்கள் தான் இந்தியாவில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணம். மனித உரிமை பற்றி பேசுகிறார்கள். பாகிஸ்தான் தான் தீவிரவாதங்களை தூண்டிவிட்டு மனித உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்கிறது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானில் நிதி திரட்டுகின்றன. இதற்கு அந்த நாடு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால் அங்கு தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று நவாஸ்ஷெரீப் தவறான கருத்துக்களை கூறுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்த வாரம் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஐ.நா. சபையில் உரை நிகழ்த்த உள்ளார். அப்போது அவர் பாகிஸ்தானுக்கு கடுமையான பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×