search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முஸ்லிம்கள் என்பதற்காக அகதிகளை திருப்பி அனுப்ப கூடாது: உலக நாடுகளுக்கு ஒபாமா வலியுறுத்தல்
    X

    முஸ்லிம்கள் என்பதற்காக அகதிகளை திருப்பி அனுப்ப கூடாது: உலக நாடுகளுக்கு ஒபாமா வலியுறுத்தல்

    முஸ்லிம்கள் என்பதற்காக அகதிகளை திருப்பி அனுப்பினால் அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான நாடு என்ற தீவிரவாதிகளின் அசிங்கமான பொய்ப் பிரச்சாரம் நிரூபணம் ஆகிவிடும் என அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.
    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் சபையின் 71-வது ஆண்டாந்திர உச்சிமாநாட்டின் இடையே, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அகதிகள் பிரச்சனைகள் தொடர்பான சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் எப்போதும் இல்லாத வகையில் சுமார் ஆறரை கோடி மக்கள் தங்களது வாழ்விடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் சுமார் 2.1 கோடி மக்கள் தங்களுக்கு சொந்தமான அனைத்தையும், அனைவரையும் இழந்துவிட்டு ஒரு சூட்கேசுடனோ, முதுகில் துணி மூட்டையுடனோ வெளியேறியவர்கள்.

    இந்நிலையில், அடைக்கலம் தேடிவரும் அகதிகளை அவர்களின் பின்னணி அல்லது மதம்சார்ந்த காரணங்களுக்காக.., குறிப்பாக, அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக நாம் திருப்பி அனுப்பினால் அமெரிக்காவைப் போன்ற நாடுகள் இஸ்லாமுக்கு எதிரானவை என்று தீவிரவாதிகள் செய்துவரும் பொய்ப்பிரசாரத்தை நாமே நிரூபிப்பதுபோல் ஆகிவிடும்.

    பன்முகத்தன்மையை உயர்த்திப் பிடிப்பதன் வாயிலாக மற்றும் இதைப்போன்ற அசிங்கமான பொய்யை நாம் புறக்கணிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் அகதிகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலில் அகதிகளாக வருபவர்களை மிக கடுமையான பரிசோதனைகளுக்கு நாம் உட்படுத்தி வருகிறோம்.

    பிறநாடுகளால் நிராகரிக்கப்படும் அகதிகள் வேறு வழியின்றி ஆள்கடத்தல் கும்பல்களுக்கு அதிகளவில் பணத்தை தந்து கள்ளத்தனமாக வேறு நாடுகளுக்குள் ஊடுருவுகின்றனர். இந்தப்பணம் எல்லாம் ஆயுதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைகளை கடத்தும் பேர்வழிகளுக்குதான் நிதியாக சென்று சேர்கிறது.

    அமெரிக்காவில்கூட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைவிட அகதிகளாக வருபவர்கள் பல்வேறுகட்ட கடுமையான பரிசோதைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அமெரிக்காவில் கடுமையாக உழைக்ககூடிய அகதிகள் எங்கள் நாட்டு ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். சிலர் புதிய தொழில்களை தொடங்கி தங்களை சேர்ந்தவர்களின் வாழ்வை சீரமைத்து தருகின்றனர். அகதிகள் நம்மை பலமுள்ளவர்களாக மாற்றுவார்கள் என்பதை நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×