search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப நவாஸ் ஷெரீப் திட்டம்
    X

    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப நவாஸ் ஷெரீப் திட்டம்

    ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று (புதன்கிழமை) காஷ்மீர் பிரச்சினையை எழுப்புகிறார். இந்தியாவும் பதிலடி தர தயாராகிறது.
    நியூயார்க்:

    ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று (புதன்கிழமை) காஷ்மீர் பிரச்சினையை எழுப்புகிறார். இந்தியாவும் பதிலடி தர தயாராகிறது.

    அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் பொதுச்சபை கூட்டம் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அமெரிக்கா சென்றுள்ளார்.

    நியூயார்க் நகரில் அவர் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியை நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது அவர் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார்.

    “தார்மீகக்கடமை என கருதி பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து போரிட்டு வருகிறது. பிராந்திய அமைதி, அரசியல் நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றுக்காக அண்டை நாடுகளுடன் தொடர்பில் இருந்து வருகிறேன்” என ஜான் கெர்ரியிடம் நவாஸ் ஷெரீப் கூறினார்.

    மேலும், காஷ்மீரில் 107 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்திருப்பதாகவும், அரசின் ஆதரவுடன் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் ஜான் கெர்ரியிடம் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டினார்.

    ஜான் கெர்ரியிடம், “இந்தியா, பாகிஸ்தான் இரு தரப்பு பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு அமெரிக்கா முக்கிய பங்காற்றும் என்று அப்போதைய ஜனாதிபதி பில் கிளிண்டன் வாக்குறுதி அளித்தார். அந்த வகையில் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு அமெரிக்க அரசும், நீங்களும் உதவ வேண்டும்” என்று நவாஸ் ஷெரீப் வலியுறுத்தினார்.

    பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்காக ‘ஜார்ப் இ அஜாப்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட நடவடிக்கை வெற்றி பெற்றிருப்பதாகவும் அவரிடம் நவாஸ் ஷெரீப் எடுத்துரைத்தார்.

    இந்த சந்திப்பின்போது பாகிஸ்தான் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ், வெளியுறவு செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயையும் நவாஸ் ஷெரீப் சந்தித்து பேசினார். அப்போது அவர் காஷ்மீரில் ராணுவத்தை கொடூரமாக இந்தியா பயன்படுத்துவதாக கூறி அதை தடுத்து நிறுத்த இங்கிலாந்து முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் இன்று (புதன்கிழமை) காலை பங்கேற்று பேசுகிறார். அவரது பேச்சில் காஷ்மீர் விவகாரம்தான் முக்கிய பங்கு வகிக்கும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாமீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறுவார்.

    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் வைக்கிற குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த பதிலடி தருவதற்கு இந்தியாவும் தயாராகி வருகிறது.

    இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், 26-ந் தேதி பங்கேற்று பேசுகிறபோது, நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தருவார். அத்துடன், பாகிஸ்தான் தொடர்ந்து எப்படி பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து, இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்த ஊக்குவித்து வருகிறது என்பதை பதான்கோட், உரி ராணுவ முகாம்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை சுட்டிக்காட்டி ஆதாரப்பூர்வமாக குற்றம் சாட்டுவார் என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.
    Next Story
    ×