search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் ஒருங்கிணைப்பு இல்லாததே இன்ஸ்பெக்டர் பலிக்கு காரணம்: பரபரப்பான தகவல்கள்
    X

    போலீஸ் ஒருங்கிணைப்பு இல்லாததே இன்ஸ்பெக்டர் பலிக்கு காரணம்: பரபரப்பான தகவல்கள்

    ராஜஸ்தானில் கொள்ளையர்களால் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு போலீஸ் ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
    சென்னை:

    ராஜஸ்தானில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    2 இன்ஸ்பெக்டர்கள், 4 போலீசாரை மட்டுமே ராஜஸ்தானுக்கு அனுப்பி வைத்ததே இன்ஸ்பெக்டர் பலியாவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அனைவருமே குற்றம் சாட்டியுள்ளனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் மனைவி பானு ரேகா கூறும்போது, எனது கணவரோடு 100 பேரையாவது அனுப்பி இருக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க ஆதங்கப்பட்டார்.

    அதே நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான போலீஸ் படையினர் நள்ளிரவு நேரத்தில் கொள்ளையர்களை ஆபத்தான முறையில் சுற்றி வளைத்திருக்க கூடாது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

    இதுபோன்ற வடமாநில கொள்ளையர்களை பிடிப்பதற்காக இதற்கு முன்னர் சென்ற போது சென்னை போலீசார் எப்படி வியூகம் வகுத்தனர். தங்களது பாதுகாப்பை எப்படி உறுதி செய்து கொண்டனர் என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. அதுபற்றி வடமாநிலங்களுக்கு பல முறை சென்று கொள்ளையர்களை குண்டு கட்டாக தூக்கி கொண்டு சென்னை திரும்பிய போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் துப்பாக்கி நடமாட்டம் மிகவும் சர்வ சாதாரணமானது. வெளி மாநிலங்களுக்கு குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போது மேற்கொள்ள வேண்டிய வி‌ஷயங்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

    வெளி மாநில போலீஸ் அதிகாரிகளுடன் தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேச வேண்டும். வெளி மாநிலத்திற்கு சென்ற பின்னர் யாரை போய் சந்திக்க வேண்டும் என்பது தமிழகத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பே உறுதி செய்யப்பட்டு விடும்.

    இதன்படி தனிப்படை போலீசார் திட்டமிட்டு அங்கு சென்று குற்றவாளிகளை பிடித்து வருவார்கள். ராஜஸ்தான் சென்ற தனிப்படையினர் அதுபோன்று திட்டமிட்டு அங்கு சென்றிருந்தால் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உயிரிழந்திருக்க மாட்டார்.

    வேளச்சேரியில் வங்கி கொள்ளையர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட போது அவர்களின் உடல் விமானத்தில் எடுத்து செல்லப்பட்டது. அப்போது தனிப்படை போலீசாரின் பாதுகாப்புக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    சென்னையில் ஐ.ஜி. அந்தஸ்தில் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பீகாரில் உள்ள உயர் அதிகாரிகளோடு பேசினார். அந்த ஐ.பி.எஸ். அதிகாரி பீகாரை சேர்ந்தவர் என்பதால் உயர் போலீஸ் அதிகாரிகள் அவரது உதவியை நாடினர். அவரும் தேவையான உதவிகளை செய்தார். குற்றவாளிகளின் உறவினர்கள் வசிக்கும் போலீஸ் எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரி ஒருவரை ஐ.பி.எஸ். அதிகாரியே சென்னையில் இருந்து தொடர்பு கொண்டு பேசினார்.

    முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து முடித்த பின்னரே குற்றவாளிகள் பற்றிய மற்ற விவரங்களை சேகரிக்க முடிந்தது. எந்தவித பிரச்சனையும் இன்றி கொள்ளையர்களின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டன.

    ராஜஸ்தான் சென்ற தனிப்படையினர் இது போன்று முன் ஏற்பாடுகளை செய்துவிட்டே களத்தில் இறங்கி இருக்க வேண்டும்.

    வெளிமாநிலங்களை பொறுத்தவரையில் குறிப்பாக ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் போலீஸ் என்று கூட பார்க்காமல் திடீர் தாக்குதல்களில் ஈடுபடக்கூடியவர்கள். எனவே இதுபற்றிய தகவல்களை உள்ளூர் போலீசார் துணையுடன் முன்கூட்டியே சேகரித்து வைத்திருக்கலாம்.

    இதன் மூலம் கொள்ளையர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு கூடுதல் படையை கேட்டு பெற்றிருக்கலாம். இதனால் கூடுதல் நாட்கள் அங்கு தங்கி இருக்க வேண்டி இருக்கும்.

    இதுபோன்ற நேரங்களில் இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தேவையான அளவிற்கு போலீஸ் படையுடன் கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை நெருங்கி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் கொள்ளையர்களை உயிருடன் பிடித்திருக்கலாம். இது போன்ற அசம்பாவிதங்களையும் தவிர்த்திருக்க முடியும்.

    இப்படி வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது லட்சக்கணக்கில் தனிப்படை போலீசார் தங்களது பணத்தையே செலவு செய்ய வேண்டிய நிலையும் உள்ளது. இங்கு வந்த பின்னர் அந்த பணம் முழுமையாக அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. மிகவும் குறைந்த அளவே செலவு தொகை கொடுக்கப்படுகிறது.

    அதே நேரத்தில் அவர்களை ஊக்கப்படுத்துவதை விட உதாசீனப்படுத்தும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபோன்ற வி‌ஷயங்களை எல்லாம் வரும் காலங்களில் உயர் அதிகாரிகள் மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

    வெளிமாநிலங்களுக்கு குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போது கடை பிடிக்க வேண்டிய வி‌ஷயங்களை பற்றி வழிமுறைகளையும் வகுக்க வேண்டும்.

    அதன்படியே எதிர்காலங்களில் செயல்பட வேண்டும். அப்போது தான் மீண்டும் ஒரு பெரிய பாண்டியனை காவல் துறை இழக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×