search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நித்யானந்தா சீடர்கள் மீண்டும் வருவதை தடுக்க பவழக்குன்று மலையில் போலீஸ் குவிப்பு
    X

    நித்யானந்தா சீடர்கள் மீண்டும் வருவதை தடுக்க பவழக்குன்று மலையில் போலீஸ் குவிப்பு

    நித்யானந்தா சீடர்கள் மீண்டும் பவழக்குன்று மலைக்கு வந்து ஆக்கிரமிப்பில் ஈடுபடுவார்கள் என்பதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகே பழமை வாய்ந்த பவழக்குன்று மலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் பல ஆண்டுகளாக குடியிருப்புகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பாக நித்தியானந்தாவின் சீடர்கள் மலையில் பல ஏக்கர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தனர்.

    அங்கு தென்னங்கீற்றுகளால் பெரிய அளவில் குடிசை ஏற்படுத்தி ஆசிரமம் அமைத்தனர். அதில் 3 சிலைகளை வைத்து பூஜை செய்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அந்த பகுதிக்கு சென்ற பொதுமக்களை அவர்கள் விரட்டினர். இதனால் குடியிருப்புவாசிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

    ஆக்கிரமிப்பு இடத்தில் கான்கிரீட் கொண்டு ஆசிரமம் உள்பட பல்வேறு கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை செய்யவும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப முள்வேலி அமைப்பதற்கான கம்பிகள், கற்கள் மலைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதைக்கண்ட அந்த பகுதி பொதுமக்கள் மலையில் முள்வேலி அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆசிரமத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    மேலும் திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.

    இதையடுத்து உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, தாசில்தார் ரவி மற்றும் போலீசார் பவழக்குன்று மலைக்கு சென்று அவர்கள் நித்தியானந்தாவின் சீடர்கள் அமைத்திருந்த ஆசிரமத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது மலையை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டி பூஜை நடத்தி வருவது தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரமத்தை அகற்ற உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். வருவாய் துறையினர் மற்றும் போலீசார் ஆசிரமத்தை அகற்றும் நடவடிக்கையை தொடங்கினர். ஆசிரமத்துக்குள் இருந்தவர்களை வெளியேறும்படி கூறினர். சீடர்கள் வெளியே செல்ல மறுத்தனர்.

    இதையடுத்து வருவாய் துறையினர் ஒவ்வொரு பகுதியாக கூரையை அகற்றினர். தொடர்ந்து ஆசிரமத்தின் உள்ளே இருந்த சிலைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அதற்கு சீடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளை வெளியேறும்படி கூறினர்.

    ஆண் சீடர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி மலையில் இருந்து வெளியேற்றினர். பின்னர் சிலைகளையும் மலையில் இருந்து கீழே இறக்கினர். பெண் சீடர்களை ஆசிரமத்தில் இருந்து வெளியேறும்படி அதிகாரிகள் கூறினார்கள்.

    ஆனால் அவர்கள் வெகுநேரமாக சிலைகள் இருந்த இடத்தின் அருகே அமர்ந்திருந்தனர். இதையடுத்து பெண் போலீசார் அவர்களை மலையை விட்டு கீழே இறக்க முயன்றனர்.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் சீடர்கள் உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அதையடுத்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து நித்தியானந்தாவின் சீடர்கள் வெளியேற்றப்பட்டதோடு அவர்கள் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

    ஆசிரமத்தை அப்புறப்படுத்த போலீசார் வருவாய் அதிகாரிகள், நித்யானந்த சீடர்களுடன் 2 மணி நேரம் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீடர்கள் மீண்டும் பவழக்குன்று மலைக்கு வந்து ஆக்கிரமிப்பில் ஈடுபடுவார்கள் என்பதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதே இடத்தை மீண்டும் நித்தியானந்தா சீடர்கள் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி எச்சரிக்கை விடுத்தார்.
    Next Story
    ×