search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை நடந்த வீடு
    X
    கொலை நடந்த வீடு

    சைதாப்பேட்டையில் தாய்- தங்கையை கொன்ற வாலிபர் கைது

    சைதாப்பேட்டையில் குடும்ப தகராறு காரணமாக தாய் மற்றும் சகோதரியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை கே.பி.கோவில் தெருவில் மகாலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஹேமலதா (51). இவரது கணவர் சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டார்.

    மகன் பாலமுருகன், மகள் ஜெயலட்சுமி ஆகியோருடன் ஹேமலதா வசித்து வந்தார். என்ஜினீயரிங் முடித்துள்ள பாலமுருகன் தரமணியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஜெயலட்சுமி என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஹேமலதாவும், ஜெயலட்சுமியும் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்த இரட்டை கொலை சம்பவம் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்களும் அதிக அளவில் திரண்டனர். கொலையாளி யார்? என்பதை கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    தாய்-மகள் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில், அவர்களுடன் வசித்து வந்த மகன் பாலமுருகன் காணாமல் போயிருந்தார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் தான் இந்த கொலைகளை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர்.

    இதன் அடிப்படையில் பாலமுருகனை கண்டு பிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் பாலமுருகனை தேடி வந்தனர். இன்று காலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

    தாயையும் தங்கையையும் பாலமுருகன் கொலை செய்தது ஏன் என்பது பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    பாலமுருகனின் தந்தை சண்முகம் பொதுப்பணித்துறையில் வேலை செய்து வந்தார். தாய் ஹேமலதாவும் அரசு பணியில் இருந்தார். இதனால் குழந்தைகள் இருவரையும் நன்றாக படிக்க வைக்க பெற்றோர்கள் நினைத்தனர். இதன்படி பாலமுருகன், ஜெயலட்சுமி இருவரையும் என்ஜினீயரிங் படிக்க வைக்க ஆசைப்பட்டனர். பாலமுருகன் என்ஜினீயரிங் முடித்துவிட்டு தரமணியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

    ஜெயலட்சுமி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இப்படி சந்தோ‌ஷமாக சென்று கொண்டிருந்த இந்த குடும்பத்தில் விபத்து ரூபத்தில் விதி விளையாடியது.

    கடந்த ஆண்டு நடந்த ஒரு விபத்தில் தந்தை சண்முகம் மரணம் அடைந்தார். அவரது உயிரிழப்பு குடும்பத்தில் உள்ள அனைவரையும் நிலை குலைய செய்தது. குறிப்பாக பாலமுருகன் தந்தையின் மரணத்தால் வாழ்க்கையையே வெறுக்கும் அளவுக்கு தள்ளப்பட்டார். விரக்தியின் உச்சத்துக்கே அவர் சென்றார். தந்தை இல்லாத இந்த உலகில் நாம் ஏன் வாழ வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற விபரீத எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தாய் ஹேமலதா, தங்கை ஜெயலட்சுமி ஆகியோரிடம் நாம் 3 பேரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் அவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக 3 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று தந்தையின் மரணம் பால முருகனை கடுமையாக வாட்டியது. அவர் தாய் ஹேமலதாவிடம் என்னால் தந்தையின் மரணத்தை மறக்க முடியவில்லை. உங்களை விட்டு விட்டு நான் மட்டும் தற்கொலை செய்து கொள்ள விரும்பவில்லை. 3 பேருமே இந்த உலகை விட்டு சென்று விடலாம் என்று மன்றாடி கேட்டுள்ளார். அதற்கு ஹேமலதா ஒத்துக்கொள்ளவில்லை.

    இதையடுத்து நேற்று பிற்பகலில் சைதாப்பேட்டை வீட்டில் வைத்து பாலமுருகன் ஹேமலதாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது பெற்ற தாய் என்றும் பாராமல் ஹேமலதாவை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    பின்னர் ஹேமலதாவின் உடல் அருகில் தேங்கி கிடந்த ரத்தத்தை பேப்பரால் துடைத்து எடுத்த பாலமுருகன் வீட்டிலேயே தங்கையின் வருகைக்காக காத்து இருந்தார். வெளியில் சென்று இருந்த ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்தார். அப்போது அவரையும் கழுத்தை அறுத்து கொன்றார்.

    பின்னர் கதவை சாத்திவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிய பாலமுருகன் நேராக கேளம்பாக்கம் சென்றார்.

    கேளம்பாக்கத்தில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கிய அவர் அங்கு வைத்து தற்கொலை செய்து கொள்ளவும் திட்டமிட்டு இருந்தார். இதற்கிடையே அவரை தேடிய தனிப்படை போலீசார் லாட்ஜுக்கு விரைந்து சென்று பால முருகனை கைது செய்தனர்.

    இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.

    கொலையாளி பாலமுருகன் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிறையில் அடைக்கப்படும் அவருக்கு மன நல பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×