search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவில் அருகே விபத்து: கார்-பஸ் நேருக்குநேர் மோதல்- டிரைவர், குழந்தை நசுங்கி பலி
    X

    நாகர்கோவில் அருகே விபத்து: கார்-பஸ் நேருக்குநேர் மோதல்- டிரைவர், குழந்தை நசுங்கி பலி

    நாகர்கோவில் அருகே காரும் பஸ்சும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலியாயினர்.
    என்.ஜி.ஓ.காலனி:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா புறப்பட்டனர். அவர்கள் வந்த கார் இன்று காலை நாகர்கோவில் அருகே உள்ள ஆசிராமம் பகுதியில் சென்றுகொண்டு இருந்தது.

    அப்போது கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு அரசு பஸ் எதிரே வந்தது. எதிர் பாராதவிதமாக பஸ்சும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்டன.

    இதில் அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுட்டனர்.

    மேலும் இந்த விபத்து பற்றி சுசீந்திரம் போலீசாருக்கும், கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது காரின் டிரைவர் உடல் நசுங்கி காருக்குள்ளேயே பலியாகி இருந்தது தெரிய வந்தது. மேலும் காரில் பயணம் செய்த கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தை ஆகிய 3 பேரும் ரத்தவெள்ளத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.


    அவர்கள் 3 பேரையும் உடனே போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகர் கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த தம்பதியின் ஆண் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது.

    இந்த விபத்துபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் சாலையின் குறுக்கே மாடு ஒன்று சென்றதால் டிரைவர் காரை திருப்பிய போது அரசு பஸ் மீது மோதி இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    Next Story
    ×