search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான மதுரை வீரர் உடல் 24 குண்டுகள் முழங்க அடக்கம்
    X

    நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான மதுரை வீரர் உடல் 24 குண்டுகள் முழங்க அடக்கம்

    நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான மதுரை வீரர் அழகுபாண்டியின் உடலுக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.
    பேரையூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 25 வீரர்கள் பலியானார்கள்.

    இவர்களில் அழகு பாண்டி, செந்தில்குமார், பத்மநாபன், திருமுருகன் ஆகியோர் தமிழக வீரர்கள் ஆவர். இவர்களது உடல்கள் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி நடைபெற்றது.

    அழகுபாண்டி மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் தாலுகா பெரிய பூலாம்பட்டியை அடுத்த முத்துநாகையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை பிச்சைஅழகு. முன்னாள் ராணுவ வீரர்.

    முத்துநாகையாபுரம் கிராமத்தில் ஏராளமானோர் ராணுவத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்த அழகுபாண்டி எதிர்பாராதவிதமாக நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    நேற்று அழகுபாண்டியின் உடல் விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி, சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி. வீரேந்திர அகர்வால் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    அதன் பின்னர் அழகு பாண்டியின் குடும்பத்தினரிடம் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 20 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.

    அதன் பிறகு சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட அழகுபாண்டியின் உடல் சி.ஆர்.பி.எப். வீரர்களின் மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

    வீரமரணம் அடைந்த அழகுபாண்டிக்கு, பவித்ரன் (வயது 23) என்ற தம்பியும், சத்யா (26), நித்யா (24) என்ற 2 சகோதரிகளும் உள்ளனர். சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களில் சத்யாவின் கணவர் முருகன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். அழகுபாண்டியின் தம்பி பவித்ரனும் ராணுவப் பணிக்கு தேர்வாகி அடுத்த மாதம் பணிக்கு செல்ல உள்ளார்.

    அழகுபாண்டி மரணம் குறித்து தந்தை பிச்சை அழகு கூறும்போது, மகன் இறந்தது துயரத்தை தந்தாலும் நாட்டுக்காக அவனை இழந்திருக்கிறேன் என நினைக்கும் போது பெருமையாக உள்ளது என்றார்.

    சகோதரிகள் கூறுகையில், அழகுபாண்டிக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டிருந்தோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போனில் அவரிடம் பேசியபோது இதனை தெரிவித்தோம். பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மே, ஜுன் மாதத்தில் விடுமுறையில் நீ ஊருக்கு வரும்போது திருமணத்தை நடத்தலாம் என்று கூறினோம். ஆனால் இப்போது இருக்கிற சூழ்நிலையில் விடுமுறை கிடைக்குமோ, கிடைக்காதோ என தெரியவில்லை என்று அழகுபாண்டி தெரிவித்தார்.

    இருப்பினும் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அழகுபாண்டி மரணம் அடைந்து விட்டார் என்றனர்.

    அழகுபாண்டியின் தம்பி பவித்ரன் கூறுகையில், எனது அண்ணணுக்கு தேசப்பற்று அதிகம். ராணுவப்பணிக்கு வரும்படி இளைஞர்களை ஊக்கப்படுத்துவார். நானும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார். அதன்படி, நான் ராணுவத்திற்கு தேர்வாகி உள்ளேன். அடுத்த மாதம் பணிக்கு செல்ல உள்ள நிலையில் அண்ணனை இழந்து விட் டேன் என்றார்.

    அழகுபாண்டியின் உடலுக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×