search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணத்துக்கடவில் கருவூலத்தில் ரூ.25 லட்சம் முத்திரை தாள்- கோர்ட்டு ஸ்டாம்புகள் திருட்டு
    X

    கிணத்துக்கடவில் கருவூலத்தில் ரூ.25 லட்சம் முத்திரை தாள்- கோர்ட்டு ஸ்டாம்புகள் திருட்டு

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கருவூலத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள முத்திரை தாள் மற்றும் கோர்ட்டு ஸ்டாம்புகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிணத்துக்கடவு:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் எதிரே சார் நிலை கருவூலம் உள்ளது. இங்கு கிணத்துக்கடவு நெகமம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த முத்திரைதாள் விற்பனையாளர்களுக்கு முத்திரைத்தாள், கோர்ட்டு ஸ்டாம்புகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பள பட்டியல் சரிபார்க்கப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி இங்கு நடக்கிறது.

    முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கு விற்க லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாள், கோர்ட்டு ஸ்டாம்புகளை 2 பீரோக்களில் வைத்திருந்தனர்.

    இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் கருவூல ஊழியர்கள் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர். 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று காலை கருவூல உதவி அதிகாரி ராஜ்குமார் வந்தபோது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு முத்திரைத்தாள், கோர்ட்டு ஸ்டாம்புகள் திருடிச்சென்றது தெரியவந்தது.


    இது குறித்து தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி, பேரூர் துணை சூப்பிரண்டு வேல்முருகன், இன்ஸ்பெக்டர் திருமேனி, சப்-இன்ஸ்பெக்டர்கள், பிரபாகரன், தெய்வேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.

    சம்பவம் தொடர்பாக பேரூர் டி.எஸ்.பி. வேல்முருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் திருமேனி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    இது குறித்து போலீசார் கூறும்போது, கிணத்துக்கடவு சார்நிலை கருவூலத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 100 முத்திரை தாள்கள் ரூ.20 லட்சமும், ரூ.5 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள கோர்ட்டு ஸ்டாம்புகளை திருடிச்சென்றனர்.

    இந்த அலுவலகத்தில் கண்காணிப்பு கேமிரா மற்றும் எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் செயல்படவில்லை. இங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் வேறு பணிக்கு சென்றனர்.

    இதை பயன்படுத்திய கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள். இவ்வாறு போலீசார் கூறினர்.

    Next Story
    ×