search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ஞானமணி, முல்லை வனநாதன்.
    X
    கைதான ஞானமணி, முல்லை வனநாதன்.

    திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு: குருக்கள் மகனுடன் கைது

    திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் கண்காணிப்பு கேமராவை துணியால் மூடிவிட்டு உண்டியல் பணத்தை திருடியது தொடர்பாக கோவில் பரம்பரை குருக்கள் மகனுடன் கைது செய்யப்பட்டார்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த, பிரசித்தி பெற்ற அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்து செல்வார்கள்.

    மேலும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களிலும், பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தேவஸ்தானம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக கோவிலுக்கு 3 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக தேவஸ்தானம் சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் கண்காணிப்பு கேமராவை மறைத்து உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணம் திருடப்படுவதாக திருச்செங்கோடு சீதாராம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரனிடம் புகார் கொடுத்தார்.

    இதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு, திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில், குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிர்வேல், மணி, சுமதி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதற்கிடையில் அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவில் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் நேற்று காலை அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு சென்று அந்த உண்டியலை சோதனையிட்டார். நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட இந்த உண்டியலில் 2 பூட்டுகள் போடப்பட்டு இருக்கும். இந்த பூட்டுகளின் 2 சாவிகளில் ஒன்று இணை ஆணையரிடமும், மற்றொரு சாவி மாவட்ட அதிகாரியிடமும் இருக்கும். அந்த பூட்டுகள் திறந்ததற்கான அடையாளமோ, உடைக்கப்பட்டதற்கான அடையாளமோ எதுவும் இல்லை. இந்து அறநிலையத்துறை இலாகா முத்திரையும் அப்படியே இருந்தது.

    இதையடுத்து இணை ஆணையர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்து பார்த்தபோது, கடந்த 17-ந் தேதி மாலை 6.40 மணிக்கு ஒருவர் கண்காணிப்பு கேமராவை துணியால் மூடியது தெரியவந்தது. இதையடுத்து கேமராவை துணியால் மூடிவிட்டு உண்டியலில் பணம் திருடப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த அவர் திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் திருச்செங்கோடு நகர போலீசார், தனிப்படை போலீசாருடன் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவில் பரம்பரை குருக்களான ஞானமணி (வயது 65), அவருடைய மகன் முல்லை வனநாதன் (24) ஆகியோர் உண்டியலில் காணிக்கை பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    முல்லை வனநாதன் கண்காணிப்பு கேமராவை துணியால் மூடியதும், ஞானமணி குச்சியில் பசையை தடவி உண்டியலுக்குள் விட்டு பணத்தை ஒட்டவைத்து திருடியதும், இவ்வாறாக இவர்கள் தினமும் பல ஆயிரம் ரூபாய் வரை திருடியதும் தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்கள் வீடு கட்ட ரூ.20 லட்சம் கடன் வாங்கி இருந்ததும், அதற்கான தவணையாக மாதம் ரூ.40 ஆயிரம் கட்ட வேண்டியது இருந்ததும், வருமானம் போதாததால் உண்டியலில் திருடியதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவர்களது வீட்டில் சோதனை நடத்தி வீட்டில் இருந்த ரூ.56 ஆயிரத்து 630-ஐ பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ கூறும்போது, கோவில் உண்டியல் பணத்தில் ரூ.3 லட்சம் வரை அவர்கள் திருடியிருக்கலாம் என்று கருதுகிறோம். இவர்கள் உண்டியலில் திருடும்போது, கோவில் பணியாளர்கள் யாராவது பக்தர்கள் வருகிறார்களா என காவல் காத்து உதவி செய்து இருக்கலாமா? என்ற சந்தேகத்தின் பேரிலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.

    அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவில் உண்டியலில் குருக்களே பணம் திருடிய சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×