search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை: ஜெயலலிதா அறையை குறிவைத்து கைவரிசை காட்டிய முகமூடி கும்பல்
    X

    கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை: ஜெயலலிதா அறையை குறிவைத்து கைவரிசை காட்டிய முகமூடி கும்பல்

    ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியை கொலை செய்த கும்பல் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோத்தகிரி:

    ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியை கொலை செய்த கும்பல் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    16 நுழைவு வாயில்கள் கொண்ட இந்த எஸ்டேட்டில் ஜெயலலிதா வழக்கமாக 9-வது எண் நுழைவு வாயிலையே பயன்படுத்தி வந்தார். அதன் அருகிலுள்ள 10-வது எண் நுழைவு வாயிலில் தான் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. நேற்று அதிகாலை 2 கார்களில் 10 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து வந்துள்ளனர். நுழைவு வாயிலுக்குள் சிறிது தூரத்துக்கு முன்பு கார்களை நிறுத்திய கும்பல் இரு குழுவாக பிரிந்தனர். அதில் 5 பேர் 10-வது நுழைவு வாயிலில் பணியில் இருந்த ஓம் பகதூரை தாக்கினர். சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக அவரது வாயை துணியால் கட்டியும், மயக்க ஸ்பிரே அடித்தும் உள்ளனர்.

    பின்னர் ஓம் பகதூரை கத்தியால் குத்தி கொலை செய்த கும்பல் உடலை கயிற்றால் கட்டி மரத்தில் தொங்க விட்டனர். இதற்கிடையே முகமூடி அணிந்த மற்றொரு கும்பல் 8-வது எண் கொண்ட நுழைவு வாயிலுக்குள் சென்றனர். அங்கு பணியில் இருந்த கிருஷ்ண பகதூர்(37) என்ற காவலாளியை தாக்கிய கும்பல் அவரது கைகளில் கத்தியால் வெட்டினர். இதில் அவர் மயங்கி விழுந்தார். அவர் இறந்து விட்டதாக கருதிய கும்பல் எஸ்டேட் பங்களாவுக்குள் நுழைந்துள்ளனர்.

    பங்களாவின் ஓர் அறையில் இருந்த 3 சூட்கேஸ்களில் இருந்து தங்க கட்டிகள், தங்க மற்றும் வைர நகைகள், கோடிக்கணக்கில் பணம், ஆவணங்களை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த அறை ஜெயலலிதா பயன்படுத்தும் அறை என்றும் கூறப்படுகிறது. அறைக்குள் இருந்த 3 சூட்கேஸ்களும் திறந்து கிடந்தன. ஆனால் அவற்றில் என்ன பொருட்கள் இருந்தன என்பதை கூறவும் கூட அங்கு யாரும் இல்லை

    சசிகலாவுக்கு நெருங்கியவர்கள் இந்த பங்களாவுக்குள் நுழைய எந்த தடையும் இல்லை என்பதால் அவருக்கு எதிராக செயல்படுபவர்கள் பங்களாவுக்குள் நுழைந்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்று விட்டதாகவும் அப்பகுதியில் தகவல் பரவியது.

    சம்பவம் நடந்த நேரத்தில் எஸ்டேட்டில் மின்இணைப்பு இல்லாமல் இருந்திருக்கிறது. கொள்ளை கும்பல் தான் மின் இணைப்பை துண்டித்து விட்டு கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், நுழைவு வாயிலின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்கள் வேலை செய்யவில்லை.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது சமீபத்தில் பங்களா நிர்வாகத்தினர் கண்காணிப்பு காமிரா பதிவுகளை நிறுத்தியதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    கொள்ளை கும்பல் முகமூடி அணிந்து வந்து காவலாளி ஓம் பகதூரின் வாயை கட்டி மயக்க ஸ்பிரே அடித்தது, ஓம்பகதூரின் உடலை மரத்தில் தொங்க விட்டது ஆகியவை போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிய பாணியில் இச்சம்பவம் நடந்திருப்பதால் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக மாவோயிஸ்டு நடமாட்டம் இருப்பதால் இச்சம்பத்தில் மாவோயிஸ்டுகளுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×