search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை முழு அடைப்பு: ஓட்டல்கள் மூடப்படுகிறது- லாரி, ஆட்டோக்கள் ஓடாது
    X

    நாளை முழு அடைப்பு: ஓட்டல்கள் மூடப்படுகிறது- லாரி, ஆட்டோக்கள் ஓடாது

    விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக ஓட்டல்களும் மூடப்படுகின்றன.
    சென்னை:

    விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை முழு அடைப்பு (பந்த்) நடைபெறுகிறது.

    அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து இதனை ஒருங்கிணைத்துள்ளன.

    முழு அடைப்புக்கு 2 வணிகர் சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளதால் நாளை அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன.

    மளிகை, டீக்கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட சிறு கடைகள் முதல் மால்கள் வரை அனைத்தும் மூடப்படுகின்றன.

    தமிழ்நாடு முழுவதும் ஓட்டல்களும் நாளை மூடப்படுகின்றன. 10 ஆயிரம் பெரிய ஓட்டல்கள் உள்பட 5 லட்சம் சிறிய ஓட்டல்கள் அடைக்கப்படுகின்றன.

    மணல் லாரிகளும் ஓடாது. பால் முகவர்களும் முழு அடைப்புக்கு ஆதரவு கொடுத்து இருப்பதால் காலை 8 மணிக்கு பிறகு பால் கடைகள் மூடப்படுகின்றன. பால் முகவர்கள் தங்கள் கடைகளில் கறுப்பு கொடி ஏற்றி பால் விற்பனையில் ஈடுபடுவதாக சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

    சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பெரும்பாலான ஆட்டோக்கள் நாளை ஓடாது. தொ.மு.ச., சி.ஐ.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ, சி., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதால் ஆட்டோக்கள் ஓடாது.

    சென்னையில் ப்ரீ-பெய்டு ஆட்டோக்களும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 500 ப்ரீ-பெய்டு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சென்ட்ரலில் இருந்து ஆட்டோக்கள் இயக்கப்படாது என்று சங்க தலைவர் உசேன் தெரிவித்தார்.

    பாதுகாப்பு கருதி ஆட்டோக்களை இயக்கவில்லை. மாலை 6 மணிக்கு பிறகு இயக்கப்படும். ப்ரீ பெய்டு ஆட்டோக்கள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள்.

    ஆனால் அரசு மற்றும் தனியார் பஸ்கள் முழுமையாக இயக்கப்பட உள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தராததால் சென்னையில் மாநகர பஸ்களை முழுமையாக இயக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு வழக்கம் போல எல்லா பஸ்களும் புறப்பட்டு செல்லும். அது போல வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பஸ்களை இயக்கவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பகல் நேரத்தில் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுமா? என்பது குறித்து இதுவரையில் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் மாலையில் வழக்கம் போல பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    பால், மருந்து, குடிநீர் போன்ற அத்யாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் போலீஸ் பாதுகாப்புடன் இந்த சேவை தடையின்றி செயல்படும்.

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அதனால் அனைத்து மொத்த, சில்லரை வியாபார கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×