search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் மண்டியிட்டு போராட்டம் நடத்திய காட்சி
    X
    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் மண்டியிட்டு போராட்டம் நடத்திய காட்சி

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் மண்டியிட்டு போராட்டம்

    ஹைட்ரோ கார்பன் திட் டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் பொதுமக்கள் மண்டியிட்டு போராட்டம் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசலில் மத்திய அரசு சார்பில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக 22 நாட்கள் நடந்த தொடர் போராட்டம் கடந்த மாதம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

    ஆனாலும் நல்லாண்டார் கொல்லை, வடகாடு ஆகிய கிராமங்களில் தொடர் போராட்டம் நடந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் அளித்த உறுதிமொழியை ஏற்று அங்கு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையே மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது.

    மத்திய அரசு பொய்யான வாக்குறுதியை அளித்து மக்களை ஏமாற்றி விட்டதாக கூறி நெடுவாசலில் கடந்த 12-ந்தேதி முதல் மீண்டும் போராட்டம் தொடங்கியது. நாளுக்கு நாள் போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவருகிறது.

    நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே தினமும் திரளும் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி நேற்று 12-வது நாளாக நெடுவாசலில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர்.

    மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், சிறுவர்கள், பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மண் தரையில் மண்டியிட்டவாறு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து விவசாயத்தை அழிக்காதே என்றும் அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×