search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரவாதி கார்த்திகேயன்
    X
    மந்திரவாதி கார்த்திகேயன்

    பெரம்பலூர் மந்திரவாதியை காவலில் எடுத்து விசாரிக்க வனத்துறை முடிவு

    மாணவியின் உடலை வைத்து மாந்திரீக வேலையில் ஈடுபட்ட பெரம்பலூர் மந்திரவாதியை காவலில் எடுத்து விசாரிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் இறந்து போன மாணவியின் உடலை வைத்து மாந்திரீக வேலையில் ஈடுபட்ட மந்திரவாதி கார்த்திக்கேயனை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசார் நடத்திய சோதனையில் 20-க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள், மந்திர தகடுகள், மாந்திரீகம் தொடர்பான புத்தகங்கள், மை டப்பாக்கள், ஆண்மை விருத்தி மற்றும் ஆஸ்துமா நோய்க்கு பயன்படுத்தப்படும் 40 கடல் குதிரைகள், காளி மற்றும் விநாயகர் சிலைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதில் கைப்பற்றப்பட்ட கடல் குதிரைகளை வனத்துறை அனுமதியின்றி வைத்திருக்ககூடாது. ஆனால் மந்திரவாதி 40 கடல் குதிரைகளை வைத்து மாந்திரீக வேலை செய்து வந்துள்ளார்.

    இந்த கடல்குதிரைகளை கைப்பற்றிய போலீசார் உடனடியாக மாவட்ட வனத்துறை அலுவலர் சொர்ணப்பன், வனச்சரக அலுவலர் ரவீந்திரன் ஆகியோரிடம் கடந்த மார்ச் 14-ந்தேதி ஒப்படைத்தனர். இதையடுத்து வனத்துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி தடை செய்யப்பட்ட உயிரினத்தை சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் வைத்திருந்தது குற்றத்திற்காக மந்திரவாதி மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.

    இந்நிலையில் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் மந்திரவாதி கார்த்திக்கேயன், அவரது மனைவி நஷிமா ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். வருகிற மே மாதம் 5-ந்தேதி வரை அவர்களை காவலில் வைக்க நீதிபதி சுஜாதா உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் மந்திரவாதி கார்த்திக்கேயனை தங்களது காவலில் எடுத்து கடல் குதிரை எங்கிருந்து வாங்கினார். அவருக்கு விற்றவர் யார்? தொடர்புடையவர்கள் யார்? யார்? என விசாரணை நடத்த வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

    இதனால் வருகிற 24-ந்தேதி அல்லது 25-ந்தேதி காவலில் எடுக்க முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×