search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்
    X
    குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

    நெல்லை அருகே குளத்தை தூர்வார எஸ்.பி. தலைமையில் களம் இறங்கிய போலீசார்

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தலைமையில் போலீசார் இன்று காலை குறிச்சிகுளத்தில் வண்ணான் பச்சேரி குளத்தை தூர்வார களம் இறங்கினர்.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே குறிச்சிகுளத்தில் வண்ணான் பச்சேரி குளம் உள்ளது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குளத்து நீர் மூலம் சுற்றுப்பகுதியில் ஏராளமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த குளம் உள்ளது.

    பருவ மழை பொய்த்ததால் இந்த குளம் வறண்டு காணப்பட்டது. மேலும் முட்புதர்கள் அடர்ந்தும், மண் மேடு சூழ்ந்தும் காணப்பட்டது. இதனால் மழை காலத்தில் தண்ணீர் தேங்கமுடியாத நிலை உண்டானது. இதையடுத்து இந்த குளத்தை தூர்வாரவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தலைமையில் போலீசார் இன்று காலை அந்த குளத்தை தூர்வார களம் இறங்கினர். இதற்காக நெல்லை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் மற்றும் போலீசார் 100க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கையில் மண் வெட்டி சகிதமாக குளத்துக்குள் இறங்கினர்.


    போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் காட்சி

    அவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனும் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். காலையில் தொடங்கிய இப்பணி வெகு வேகமாக நடைபெற்றது. போலீசார் ஆர்வத்துடன் இந்த பணியில் ஈடுபட்டதை பார்த்த பொதுமக்கள், விவசாயிகள் சிலரும் போலீசாருடன் கைகோர்த்து பணியில் இறங்கினர்.

    குளத்தில் இருந்த வேலிக்கருவை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. மண்மேடுகள் அகற்றப்பட்டது. அகன்ற பரப்பிளான குளம் முழுமையும் தூர்வாரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனுடன் தாழையூத்து டி.எஸ்.பி. பொன்னரசு, ஆயுதப்படை டி.எஸ்.பி. மனோகர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ்,

    இன்ஸ்பெக்டர்கள் தாழையூத்து ஜூன் குமார், கங்கைகொண்டான் ஆவுடையப்பன், மானூர் ராபின்சன், விவசாய சங்க தலைவர் அர்ச்சுணன் உள்பட பலரும் கலந்து கொண்டார்கள். போலீசாரின் இந்த சேவையை அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் வெகுவாக பாராட்டினார்கள்.
    Next Story
    ×