search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
    X

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

    3, 4-வது யூனிட்களில் ஏற்பட்டுள்ள பழுதால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 1979-ம் ஆண்டு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உடைய 5 யூனிட்கள் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த அனல்மின் நிலையம் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலத்தையும் தாண்டி இயங்கி வருகிறது.

    இங்குள்ள அனைத்து யூனிட்களிலும் அடிக்கடி பழுது ஏற்படுவதும், இதன் காரணமாக மின் உற்பத்தி தடைபடுவதும், பின்னர் அவை சரி செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகை மின் உற்பத்தி காரணமாக 1-வது யூனிட்டில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் அந்த யூனிட் மீண்டும் இயங்க தொடங்கியது.

    இந்நிலையில் கடந்த 19-ந்தேதி காலை 3-வது யூனிட்டின் கொதிகலனில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் மொத்த உற்பத்தியில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கொதிகலனின் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் என்ஜினீயர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் அனல்மின் நிலையத்தில் உள்ள 4-வது யூனிட் கொதிகலனில் நேற்று பிற்பகலில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த யூனிட்டில் உடனடியாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 3, 4-வது யூனிட்களில் ஏற்பட்டுள்ள பழுதால் அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2 யூனிட்களிலும் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    Next Story
    ×