search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் தட்டுப்பாடு நோயாளிகள் அவதி
    X

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் தட்டுப்பாடு நோயாளிகள் அவதி

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை ஜெ.என். சாலையில் உள்ளது.

    இந்த மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, தீவிர இருதய சிகிச்சை பிரிவு, தீ காயம் சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு, அறுவைச் சிகிச்சை பிரிவு, குழந்தை மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், வி‌ஷ முறிவு சிகிச்சை, காசநோய் சிகிச்சை, சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் உட்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

    மருத்துவமனை வளாகத்தில் நிர்வாக அலுவலகம், இணை இயக்குநர் அலுவலகம், மலேரியா பரிசோதனை கூடம் ஆகியவையும் செயல்பட்டு வருகிறது.

    தினமும் ஆஸ்பத்திரிக்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள், வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். எந்த வார்டிலும் குடிநீர் குழாய் கிடையாது.

    மகப்பேறு பிரிவில் வெளியே மட்டும் தனியார் மூலம் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளது. ஆனால் அதில் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தண்ணீர் வருகிறது.

    இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் கூடுதல் பாட்டில்களில் தண்ணீர் பிடித்து வைக்கும் நிலை உள்ளது.

    தாமதமாக வரும் மருத்துவமனை வருபவர்கள் மருத்துவமனை வெளியே சென்று பணம் கொடுத்து குடிநீர் வாங்கி வருகின்றனர்.

    தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள் நலன் கருதி குடிநீர் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×