search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலழகன்
    X
    வேலழகன்

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருபுவனை:

    புதுவை மாநிலம் திருபுவனை சின்னபேட் பகுதியை சேர்ந்தவர் வேலழகன் (வயது 45). என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர். இவர், பழைய இரும்பு பொருட்களை வாங்கி தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    மேலும் தனியார் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் தொழிலும் செய்து வந்தார்.

    நேற்று மாலை சன்னியாசிகுப்பம் சாலையில் உள்ள தனது பழைய இரும்பு பொருட்களை சேகரித்து வைக்கும் குடோனை பார்வையிட காரில் சென்றார். பின்னர் வீட்டுக்கு செல்ல வேலழகன் காரில் ஏற முயன்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் திடீரென வேலழகன் மீது நாட்டு வெடிகுண்டு வீசியது. இதனால் நிலைகுலைந்து போன வேலழகனை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் வேலழகன் ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வேலழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொழில் போட்டி காரணமாக வேலழகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்த கொலை காரணமாக திருபுவனை பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. இன்று 2-வது நாளாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வேலழகனுக்கு கீதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் திருபுவனை தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் தனது மனைவி போட்டியிட என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியிடம் சீட் கேட்டார். ஆனால், ரங்கசாமி வாய்ப்பு தரவில்லை.

    வேலழகன் சிறந்த கபடி வீரர் ஆவார். அவர் விளையாட்டு மீதான ஆர்வ மிகுதியில் கபடி விளையாட்டு சங்கத்தை தொடங்கி மாநில அளவிலான கபடி போட்டிகளை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுவையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த 15 நாட்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த 3-ந் தேதி அமைச்சர் கந்தசாமியின் உதவியாளர் வீரப்பன் தேர்தல் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.

    2 நாட்களுக்கு முன்பு ஊசுடு தொகுதி முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் மாயவன் சொத்து தகராறு காரணமாக அவரது மனைவியே கள்ளக்காதலனை ஏவி கூலிப்படை மூலம் கொலை செய்தார்.

    தற்போது என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரான வேலழகன் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×