search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியது: தமிழக காற்றாலைகளில் மின்உற்பத்தி பலமடங்கு உயர்வு
    X

    தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியது: தமிழக காற்றாலைகளில் மின்உற்பத்தி பலமடங்கு உயர்வு

    தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று தொடங்கி உள்ளதால் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி பலமடங்கு உயர்ந்தது.
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் அணுமின் நிலையம், அனல் மின் நிலையம், நீர் மின் நிலையங்கள், காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    காற்றாலைகள் தவிர மற்ற அனைத்து மின்திட்டங்கள் மூலமும் ஆண்டு முழுவதும் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அதேசமயம் காற்று வீசும் காலத்தில் மட்டுமே காற்றாலைகள் செயல்பட்டு அதன்மூலம் மின்சார உற்பத்தி செய்யமுடியும். மற்ற காலங்களில் காற்றாலைகள் செயலிழந்தே காணப்படும்.

    தமிழகத்தில் காற்றாலைகள் குமரி மாவட்டத்தின் முப்பந்தல், ஆரல்வாய்மொழி, நெல்லை மாவட்டத்தின் பணகுடி, ராதாபுரம், கயத்தார் போன்ற பகுதிகளில் அதிகளவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சமீபகாலமாக காற்று பலமாக வீசாததால் இந்த காற்றாலைகள் மூலம் மிக குறைந்த அளவில் ஒருநாளைக்கு 200 முதல் 250 மெகாவாட் வரை மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவ காற்றும் தொடங்கி உள்ளதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் 500 முதல் 700 மெகாவாட் மின்சாரம் கிடைத்துவந்தது.

    இந்த நிலையில் நேற்று காற்றாலைகள் மூலம் கிடைத்து வந்த மின் உற்பத்தி பலமடங்கு உயர்ந்தது. நேற்று மட்டும் 2,242 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இன்று மேலும் அதிகரித்து 2,500 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைத்தது. இனி காற்று வீசும் காலம் என்பதால் மேலும் 5 மாதங்களுக்கு காற்றாலைகளில் மின் உற்பத்தி உச்சக்கட்டத்தில் இருக்கும் என்று காற்றாலை என்ஜினீயர் ஒருவர் தெரிவித்தார்.

    அதேசமயம் மற்ற மாநிலங்களில் காற்றலை மின் உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக 618 மெகா வாட்டாக இருந்த காற்றாலை மின்உற்பத்தி நேற்று 460 மெகாவாட்டாக குறைந்தது.

    அதேபோல ஆந்திராவில் 492 மெகாவாட்டில் இருந்து 338 மெகாவாட்டாகவும், கேரளாவில் 17 மெகா வாட்டில் இருந்து 12 மெகா வாட்டாகவும் குறைந்தது. தெலுங்கானாவில் மட்டும் 17 மெகாவாட்டில் இருந்து சற்று உயர்ந்து 22 மெகாவாட்டாக மின்உற்பத்தி இருந்தது.

    கோடைகாலத்தில் மின்சாரத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் எனவே தற்போது காற்றாலைகளில் அதிக மின்உற்பத்தி செய்யப்படுவது இதற்கு பெரிதும் கைகொடுக்கும்.
    Next Story
    ×