search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
    X

    தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. வேலூரில் பொதுமக்கள் மதுபாட்டில்களை வைத்து ஒப்பாரி வைத்து, பாடையை தூக்கி ஊர்வலமாக சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில், பெரப்பேரி செல்லும் சாலையில் 13-ந்தேதி புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது.

    இதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது 200-க்கும் மேற்பட்டோர் பாடைகட்டி அதில் பிணமாக கருதி மதுபாட்டில்களை வைத்து ஒப்பாரி வைத்து கதறி அழுதும், பாடையை தூக்கி ஊர்வலமாக சென்றும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் அந்தப் பாடையை கீழே வைத்து, அதன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். பாடை குபீரெனத் தீப்பிடித்து எரிந்தபோது, அருகில் நின்றிருந்த சிறுவன் மற்றும் 3 பெண்களின் சேலையில் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். 4 பேரும் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    வாணியம்பாடி விஜிலாபுரம் கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

    இதனை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கடை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடிக்குளத்தில் உள்ள மதுபானக்கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல் செய்து கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள கிராமத்து மேடு - வேளாங்கண்ணி இணைப்பு சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராமத்து மேடு, சின்னத்தும்பூர், பெரியத்தும்பூர், ஆலமழை, கீராந்தி, சோழவித்தியாபுரம், பாலக்குறிச்சி உள்பட 14 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள அகர திருநல்லூர் ஊராட்சி காமராஜ் காலனி அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் அகர திருநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்தனர்.

    தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காட்டில் மதுக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அந்த வழியாக சென்ற பெண்களை மதுக்கடையில் இருந்த சிலர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு எழுமாத்தூரிலிருந்து பாசூர் வழியாக நாமக்கல் மாவட்டத்தை அடையும் சாலையில் பாரதிநகர் குடியிருப்பு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபானக்கடையை திறக்க அதிகாரிகள் முடிவெடுத்து, பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



    ஆனால் எந்த பதிலும் இல்லாததாலும், டாஸ்மாக் கடை கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்றதாலும், எழுமாத்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


    Next Story
    ×