search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்: பகலில் வெளியில் நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை
    X

    தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்: பகலில் வெளியில் நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை

    தமிழகத்தில் 18 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்பதால் பகலில் வெளியில் நடமாட வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் அதிக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில் கடும் வெயிலுக்கான முன்னெச்சரிக்கை கடிதம் ஒன்று கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் இயக்குனர் ஜி.லதா நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட குறிப்பிடப்பட்ட 18 மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அனுப்பியுள்ளது.



    இந்த வெப்ப அலை இன்றும் (செவ்வாய்க்கிழமை) வீசக்கூடும் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதால் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 18 மாவட்ட கலெக்டர்களும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தற்போது கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்கள் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் குடைகளை எடுத்துச்செல்லவும். தலை, கழுத்து, கைகளை ஈரமான துணியினால் மூடிச்செல்லலாம். காற்றோட்டமான மெல்லிய பருத்தி ஆடைகளை அணியவும்.

    தினமும் வழக்கமாக பருகும் குடிநீரைவிட கூடுதலாக குடிநீர் பருக வேண்டும். குளிர்பானங்களை தவிர்த்து, ஓ.ஆர்.எஸ். பவுடர், நீராகாரம், மோர், எலுமிச்சை பழச்சாறு, இளநீர் போன்ற வெயிலுக்கு ஏற்ற பானங்களை அருந்தலாம். அதேபோல கால்நடைகளையும் வெயிலில் கட்டிப்போடாமல், கொட்டகைக்குள் வைத்து பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர்கள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×