search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தா.பேட்டையில் மழை வேண்டி கிராம மக்கள் 200 வீடுகளில் மழைசோறு வாங்கி வழிபாடு நடத்திய காட்சி.
    X
    தா.பேட்டையில் மழை வேண்டி கிராம மக்கள் 200 வீடுகளில் மழைசோறு வாங்கி வழிபாடு நடத்திய காட்சி.

    கடும் வறட்சி: மழை வேண்டி 200 வீடுகளில் சோறு வாங்கி நூதன வழிபாடு

    திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் மழை பெய்ய வேண்டி வீடுகள் தோறும் சாதம் வாங்கி பொதுமக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.
    தா.பேட்டை:

    தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளாக இப்படி ஒரு வறட்சி இருந்ததில்லை என்று கூறுமளவிற்கு போதிய மழையின்றி, விவசாயம் பொய்த்து போய், குடிநீருக்கே அல்லாடும் நிலை நீடித்து வருகிறது.

    அணைகள், ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. கால்நடைகள் போதிய தீவனம் கிடைக்காமல் பரிதவித்து வருகிறது. வறட்சி காரணமாக உணவு பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்பட்டு வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

    இதற்கிடையே திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் மழை பெய்ய வேண்டி வீடுகள் தோறும் சாதம் வாங்கி பொதுமக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் போதிய குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் பலமைல் தூரம் சென்று தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது.

    இதையடுத்து தா.பேட்டை பாவோடித்தெருவில் பெண்களும், இளைஞர்களும் சேர்ந்து சுமார் 200 வீடுகளில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் மழைசோறு வாங்கினர். அதனை பாத்திரத்தில் போட்டு ஒன்றாக கலந்து கலவை சாதமாக்கினர்.

    அப்போது வயதான பெண்கள் மழை வேண்டி ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் கலவை சாதம் ஆளுக்கு ஒரு உருண்டை வழங்கப்பட்டது.

    இதுகுறித்து தா.பேட்டையைச்சேர்ந்த பிரபு என்பவர் கூறும்போது, தற்போது தா.பேட்டையில் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. மழைவேண்டி வருண பகவானிடம் பிரார்த்தனை செய்யும் விதமாக வீடுகளில் மழைசோறு பெற்று தெரு மத்தியில் அதனை வைத்து ஒப்பாரி பாடல் பாடினர். இதனை காணும் வருண பகவான் கருணை கூர்ந்து மழை பொழிவார் என்ற நம்பிக்கை காலம்காலமாக இருந்து வருகிறது என்று கூறினார்.


    Next Story
    ×