search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் மழை இல்லாததால் வறண்டு வரும் அணைகள்
    X

    நெல்லை மாவட்டத்தில் மழை இல்லாததால் வறண்டு வரும் அணைகள்

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்னும் 10 நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு பெய்யக்கூடிய பருவ மழைகள் பொய்த்ததால் விவசாயம் கடுமையாக பாதித்து உள்ளது. கால்வாய் பாசனம் உள்ள சில பகுதிகளில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டது. மற்ற இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகின.

    விவசாயிகள் பிசான சாகுபடியை கைவிட்டனர். மழை இல்லாததால் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகள் அமைந்துள்ளன.

    குறிப்பாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூலமே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசனம், குடிநீர் வசதி நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது மழை இல்லாத நிலையில் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. சில இடங்களில் மட்டுமே கோடை மழை பெய்கிறது. மலைப்பகுதியில் மழை இல்லை. வறட்சி காரணமாக ஏற்கனவே சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் நீர்மட்டம் 43.85 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 45.86 அடியாகவும் உள்ளன. குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 204 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறில் இருந்து 50 அடி தண்ணீரும் திறக்கப்பட்டு உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 67 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணைக்கு 16 கன அடி தண்ணீரும் வருகின்றன. கடனா, ராமநதி, கருப்பாநதி அணைகளிலும் குறைவான தண்ணீரே உள்ள‌து. வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் வறண்டு போகும் நிலையில் உள்ளன.

    இதே நிலை நீடித்தால் இன்னும் 10 நாட்களில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. தற்போதுள்ள தண்ணீரை வைத்து வருகிற 30-ந் தேதி வரை தண்ணீர் வழங்கலாம். எனினும் கடும் வறட்சி காரணமாக அதற்கு முன்பாகவே குடிநீர் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. மழை வந்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும் என்கின்றனர் மக்கள்.

    Next Story
    ×