search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு தாலிக்கயிற்றுடன் மனு கொடுக்க வந்த பெண்கள்
    X
    தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு தாலிக்கயிற்றுடன் மனு கொடுக்க வந்த பெண்கள்

    புதிய மதுக்கடை அமைக்க எதிர்ப்பு வலுக்கிறது - பெண்கள் தொடர் போராட்டம்

    நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பதில் ஊர் பகுதிக்குள் புதிய மதுக்கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    சென்னை:

    நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பதில் ஊர் பகுதிக்குள் புதிய மதுக்கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் வலுத்து வருகிறது

    ஈரோடு பெரியவலசு, நால்ரோட்டில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கூறி அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திருச்சி பொன்மலை ராணுவ காலனியில் கடந்த 7-ந்தேதி புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அதனை மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    முசிறி உழவர் சந்தை அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதையடுத்து அதற்கு மாற்றாக குடியிருப்பு பகுதியான காந்தி நகரில் புதிய கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. தகவல் அறிந்து 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு வந்து கடையை முற்றுகையிட்டனர்.

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் டி.களத்தூரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் கடை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    கோனேரிபாளையம் ஆத்தூர் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதையடுத்து கோனேரிபாளையம் கிராமத்தில் புதிய கடை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். உடனே டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

    கரூர் மாவட்டம் புலியூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த கடை அகற்றப்பட்டு உப்பிடமங்கலம் பேரூராட்சி சாலப்பட்டி பச்சைக்கல் மேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்துக்கு மாற்ற ஏற்பாடு நடந்தது. இதையடுத்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

    அந்த சமயம் அங்கு வந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பாலசுந்தரம் காரை மறித்து முற்றுகையிட்டனர். வாக்குவாதம் உருவானதால் தாசில்தார் அங்கிருந்து புறப்பட்டார். மேலும் திறக்கப்பட்ட மதுக்கடையும் மூடப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இருந்த 2 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்த டாஸ்மாக் கடைகளை வேறு இடத்தில் திறக்கும் முயற்சியில் டாஸ்மாக் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகாட்டில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று வடகாடு அம்மன் குளம் பகுதியில் உள்ள பால்கண்ணு என்பவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை கட்டுவதற்காக லாரியில் செங்கல் ஏற்றி கொண்டுவரப்பட்டது. இதைக் கண்ட அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் செங்கல் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் டாஸ்மாக் கடைக்கு இடம் வழங்கிய பால்கண்ணு (வயது 65) தன் நிலத்தில் டாஸ்மாக் கடை கட்டினால் தனக்கு வருமானம் வரும். இதை அப்பகுதி மக்கள் தடுப்பதாக கூறி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வடகாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம்-சிதம்பரம் நெடுஞ்சாலையில் உள்ள கோ.பொன்னேரி அருகே டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.

    இதையடுத்து நள்ளிரவில் கோ.பொன்னேரி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக ஊருக்குள் தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நள்ளிரவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குவிந்தனர். அவர்கள் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கோ‌ஷமிட்டனர்.

    விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவும் அந்த பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த டாஸ்மாக்கடை பூட்டப்பட்டது. அந்த கடையை வல்லநாட்டில் இருந்து கலியாவூர் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள பைப்லைன் காலனி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    அந்த டாஸ்மாக்கடையில் விற்பனைக்காக மதுபாட்டில்கள் இறக்கி வைக்கப்பட்டது. நேற்று மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது வடவல்லநாடு பஞ்சாயத்திற்குட்பட்ட சேது ராமலிங்கபுரம், பாறைக்காடு, பைப்லைன் காலனியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து டாஸ்மாக்கடை முன்பு அமர்ந்து முற்றுகையிட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தாசரப்பள்ளி கிராமம் அண்ணாநகரில் புதிதாக ஒரு மதுக்கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் புதிய மதுக்கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி அணை கூட்ரோட்டில் இருந்து அணை செல்லும் சாலையில் உள்ள மதுக்கடையை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் முல்லை நகர் அருகே இயங்கி வந்த மதுக்கடை அங்கிருந்து அகற்றப்பட்டது. அதனை கோகுல் நகருக்கு செல்லும் வழியில் புதிதாக அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று அப்பகுதியில் மதுக்கடையை திறக்க டாஸ்மாக் ஊழியர்கள் வந்தனர். தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து மதுக்கடையை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடையை திறக்காமல் ஊழியர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள நடுவிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமத்துடன் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் எங்கள் பகுதியில் மதுக் கடை அமைக்கப்பட்டால் கல்லூரி மாணவிகள், பொதுமக்களுக்கு இடையூறாக அமையும். கொலை, கொள்ளை, பாலியல் தொந்தரவு போன்றவை மதுபோதையால் தான் நடக்கிறது. எனவே குடியிருப்பு பகுதி, கல்லூரி அமைந்துள்ள பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் இல்லையென்றால் பெண்கள், மாணவர்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.” என்று கூறப்பட்டிருந்தது.

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுகந்தி தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைகளை அமைக்கக்கூடாது என்று போராட்டம் நடத்திய பெண்களில் ஒருவரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தாக்கி உள்ளார்.

    இந்த செயலை ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. போராட்டம் நடத்திய பெண்ணை தாக்கிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குமரி மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களில் திறக்க நடவடிக்கை எடுத்தனர். பல்வேறு இடங்களில் கடைகளை திறக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆயத்த பணி நடந்தது.

    கன்னியாகுமரி அருகே கல்லுவிளை, தக்கலை அருகே கீழக்கல்குறிச்சி பகுதியில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராஜாக்கமங்கலம் அருகே காக்காதோப்பு பகுதி யிலும் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது.

    இன்று 4-வது நாளாக போராட்டம் நடந்தது. போராட்டத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெண்கள் கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.
    Next Story
    ×