search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈஸ்வரி
    X
    ஈஸ்வரி

    போலீஸ் அதிகாரி கன்னத்தில் அறைந்ததால் காது கேட்கும் திறன் பாதிப்பு - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

    போலீஸ் அதிகாரி, தனது கன்னத்தில் அறைந்ததால் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஈஸ்வரி நிருபர்களிடம் கூறினார்.
    திருப்பூரை அடுத்த சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நேற்று முன்தினம் போலீசார் சரமாரியாக தடியடி நடத்தினார்கள். இதில் 2 பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இவர்களில் அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி(வயது 45) என்ற பெண்ணின் கன்னத்தில் திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஓங்கி அறைந்தார். மேலும் லத்தியால் ஈஸ்வரியின் காலிலும் அடித்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த ஈஸ்வரி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    பின்னர் நேற்று காலை உண்ணாவிரதம் நடந்த இடத்துக்கு வந்த ஈஸ்வரி, பெண்களுடன் சேர்ந்து போராட்டத்தில் பங்கேற்றார். இதுகுறித்து ஈஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாலைமறியல் போராட்டம் நடத்திவிட்டு பெண்களுடன் ரோட்டோரமாக நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் முதலில் லத்தியால் என்னை தாக்கினார். பின்னர் கையால் எனது கன்னத்தில் ஓங்கி அறைந்து கீழே தள்ளி விட்டார். என்னுடன் வந்த பெண்கள் என்னை தாங்கி பிடித்துக்கொண்டனர். கன்னத்தில் அடி விழுந்ததும், எனது காதுக்குள் ‘கொய்ங்’ என்று சத்தம் கேட்டது. காதை பிடித்தபடி அங்கேயே நின்றுவிட்டேன்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் என்னை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நான் சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். எனக்கு காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

    போலீசார் லத்தியால் எனது காலில் தாக்கினார்கள். இதனால் நடக்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டுள்ளது. கொடூரமாக தாக்கிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் எங்களை தாக்கினாலும் கூட எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வரக்கூடாது என்ற முடிவில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×