search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை, திருப்பூர், நீலகிரியில் லாரி ஸ்டிரைக் தொடங்கியது
    X

    கோவை, திருப்பூர், நீலகிரியில் லாரி ஸ்டிரைக் தொடங்கியது

    ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் கட்டண உயர்வு, தமிழகத்தில் வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலை அதிகரிப்பதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

    கோவை:

    ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் கட்டண உயர்வு, தமிழகத்தில் வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலை அதிகரிப்பு, ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று (30-ந் தேதி ) முதல் ஸ்டிரைக் நடைபெறும் என அறிவித்தனர்.

    இதையடுத்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் இயக்கப்படும் 30 லட்சம் லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி இன்று முதல் தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள 4500 லாரிகள் இன்று காலை 6 மணி முதல் ஓடவில்லை. ஸ்டிரைக் காரணமாக லாரிகள் உக்கடம் லாரி பேட்டை, வடகோவை ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

    கோவையில் இருந்து வெளியூருக்கு செல்ல வேண்டிய எந்த லாரியும் இயக்கப்படவில்லை. மேலும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கோவையில் இருந்து வெளியூருக்கு ஏற்றி செல்ல வேண்டிய பொருட்கள் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரூ.100 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவை மாவட்ட லாரி உரிமை யாளர் சங்க தலைவர் கலியபெருமாள் கூறிய தாவது:-

    நாங்கள் இன்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால் போராட்டம் வாபஸ் பெறப்படும். இல்லையென்றால் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொழில் நகரமான திருப்பூரில் லாரி கள் ஸ்டிரைக்கால் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரம் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் மூலம் தான் திருப்பூரில் இருந்து பனியன்கள் சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், கொச்சின் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    தற்போது லாரிகள் ஸ்டிரைக் காரணமாக பனியன் அனுப்புவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் பல்லடத்தில் விசைத்தறி துணிகளும், காங்கயம் பகுதியில் அரிசி, மற்றும் கொப்பரை தேங்காய்கள் உள்ளிட்டவை லாரிகள் ஸ்டிரைக் காரணமாக வெளியூர்களுக்கு அனுப்ப முடியவில்லை.

    திருப்பூர் மாவட்டத்தில் லாரி தொழிலை நம்பி சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். லாரிகள் ஸ்டிரைக்கால் சுமை தூக்கும் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள், பார்சல் கட்டுவோர் ஆகியோர் வருமானமின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் தினமும் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் சுமார் 1500 லாரிகள் இயங்கி வருகின்றன. இன்று நடைபெறும் போராட்டத்தில் 1500 லாரி உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். இதனால் நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகள், பூக்கள், மற்றும் தேயிலைகள் ஆகியவை வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் காய்கறி விவசாயிகள் பாதிப்பு அடைந்தனர்.

    இதற்கிடையே ஒருசில இடங்களில் மினி வேன் மூலம் பூக்கள், காய்கறிகளை வெளியூர்களுக்கு விவசாயிகள் அனுப்பி வைத்தனர்.

    லாரி உரிமையாளர்களின் இந்த போராட்ட த்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநில அரசு தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×