search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கடல் எல்லைக்குள் சீன நீர்மூழ்கி கப்பல்கள் நுழையாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு: கடற்படை தளபதி பேட்டி
    X

    இந்திய கடல் எல்லைக்குள் சீன நீர்மூழ்கி கப்பல்கள் நுழையாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு: கடற்படை தளபதி பேட்டி

    இந்திய கடல் எல்லைக்குள் சீன நீர் மூழ்கி கப்பல்கள் நுழையாமல் தடுக்க இந்திய கடற்படையும், கடலோர பாதுகாப்பு படையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று கடற்படை தளபதி கூறினார்.

    வேலூர்:

    இந்திய கடற்படையில் ‘டி.யு.-142 எம்’ ரக போர் விமானங்கள் 29 ஆண்டுகள் பணியை நிறைவு செய்தது.

    ரஷிய நாட்டு தயாரிப்பான இந்த வகை போர் விமானங்கள் 1988-ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டன. 4 என்ஜின்கள் கொண்ட இந்த போர் விமானங்கள், எதிரி நாட்டு நீர் மூழ்கி கப்பல்களை கண்காணித்து தாக்கும் திறன் கொண்டவை.

    இதுபோன்ற விமானங்கள் மொத்தம் 8 இருந்தது. இவற்றில் ஏற்கனவே 5 விமானங்கள் விடுவிக்கப்பட்டன. மீதம் இருந்த 3 விமானங்களும், அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படையில் இருந்தன.

    இந்த 3 விமானங்களை விடுவிக்கும் விழா, அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தின் வெள்ளி விழா, ‘பி.8.ஐ.’ ரக 3 போர் விமானங்கள் கடற்படையில் சேர்க்கும் விழா என முப்பெரும் விழா அரக்கோணம் ராஜாளியில் இன்று நடைபெற்றது.

    விழாவில், கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா தலைமை தாங்கி கடற்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    விடுவிக்கப்பட்ட டி.யு.-142 எம் ரகம் கொண்ட 3 விமானங்களும், கேத்தக் மற்றும் டோனியர், பி.8.ஐ. ரக விமானங்கள் என மொத்தம் 11 விமானங்கள் வானில் பறந்து விழாவில் பார்வையாளர்களை கவர்ந்தது. விடுவிக்கப்பட்ட ‘டி.யு.-142 எம்’ ரக விமானங்களுக்கு பதிலாக அமெரிக்காவிடம் இருந்து புதிதாக பி.8.ஐ. ரக 3 விமானங்கள் வாங்கப்பட்டு கடற்படையில் சேர்க்கப்பட்டன.

    ஐ.என்.எஸ். ராஜாளி வெள்ளி விழாவை முன்னிட்டு, அஞ்சலக அதிகாரி ராதிகா சக்கரவர்த்தி புதிய அஞ்சல் தலையை வெளியிட, அதனை கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா பெற்றுக் கொண்டார்.

    மேலும் கண்காட்சி மற்றும் பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்தது. இதனை கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா பார்வையிட்டார். பிறகு அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா மற்றும் இலங்கை மீனவர் சங்கங்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    விடுவிக்கப்பட்ட பழைய 3 போர் விமானங்களுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட புதிய பி.8.ஐ. ரக 3 போர் விமானங்கள், கடல் பரப்பில் நீர் மூழ்கி கப்பல்களை துல்லியமாக கண்காணிக்க கூடியது.

    இந்திய கடல் எல்லைக்குள் சீன நீர் மூழ்கி கப்பல்கள் நுழையாமல் தடுக்க இந்திய கடற்படையும், கடலோர பாதுகாப்பு படையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. மும்பை தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கடற்படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×