search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.120 கோடி கடன் தொல்லை: திருப்பூர் தொழில் அதிபர் தற்கொலை
    X

    ரூ.120 கோடி கடன் தொல்லை: திருப்பூர் தொழில் அதிபர் தற்கொலை

    ரூ.120 கோடி கடன் தொல்லையால் தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு ரோகிணி தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி, டையிங் பேக்டரி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் டையிங் பேக்டரி, சத்தியமங்கலத்தில் ஸ்பின்னிங் மில் உள்ளிட்டவைகள் நடத்தி வந்தார்.

    இவரது மனைவி கவிதா (45). செந்தில்குமார் தொழிலை விரிவுபடுத்த வங்கியில் ரூ.120 கோடி கடன் வாங்கினார். இதுதவிர திருப்பூரில் உள்ள தொழில் அதிபர்கள் சிலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாக தெரிகிறது.

    வாங்கிய பணத்தை தொழில் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தினார். ஆனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. எதிர்பார்த்தபடி வருவாய் இல்லாததால் தொழில் நெருக்கடி ஏற்பட்டது. நெருக்கடியை சமாளிக்க செந்தில்குமார் பல யுக்திகளை கையாண்டார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

    இந்த நிலையில் கடன் வாங்கிய வங்கிகளுக்கு முறையாக தவணை செலுத்த முடியவில்லை. இதனால் வங்கி சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. இதுதவிர கடன் கொடுத்த தொழில் அதிபர்கள் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் செந்தில்குமார் விரக்தியடைந்தார்.

    நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு வந்த அவரது மனைவி மற்றும் செந்தில்குமாரின் தந்தை ஆகியோர் பார்த்தபோது செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடன் கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் யார்? எந்தெந்த வங்கிகளில் அவர் கடன் வாங்கியுள்ளார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×